சென்னை ராயப்பேட்டையில் பிரிண்டிங் யூனிட் வைத்திருக்கிறார் ராதா சுரேஷ். தனது ஆர்வத்தினால் கற்றுக்கொண்ட டிசைனிங் காரணமாக சொந்த தொழிலில் இறங்கியவர் இன்று பதினைந்து நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கும் தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார்.
பிரிண்டிங் தொழிலை செய்து கொண் டிருக்கும்போதே, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தொழிலை கொண்டு செல்ல வேண்டும் என யோசித்தபோது தேர்ந்தெடுத்த தொழில்தான் கார்ப்பரேட் கிப்டுகள் கான்செப்ட். இந்த வாரம் இவரது அனுபவம் உன்னால் முடியும் பகுதியில் இடம் பெறுகிறது.
சொந்த ஊர் திருச்சி. திருமணம் முடிந்து சென்னையிலேயே செட்டிலாகி விட்டேன். திருமணத்துக்குப் பிறகு ஹெச்சிஎல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றினேன். மார்க்கெட்டிங்கில் பல்வேறு அனுபவங்களையும் இங்கு கற்றுக்கொண்டேன். இதற்கிடையே எனக்கிருந்த டிசைனர் ஆர்வம் காரணமாக மார்க்கெட்டிங் வேலையை விட்டுவிட்டு டிசைனிங் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். டிசைனிங் வேலைகளுடன் அவ்வப்போது பிரிண்டிங் ஆர்டர்களும் கிடைக்க, இதுதான் நமக்கு பொருத்தமான தொழில் என்று கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
வீடு, குழந்தைகள், வேலை என நேரத் தை ஒதுக்கிக் கொண்டதால் சிக்கல்கள் எழவில்லை. இதற்கேற்ப கணவர் மற்றும் வீட்டினரின் ஒத்துழைப்பும் இருந்தது. பிரிண்டிங் வேலைகளை வெளியில் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்த நிலை யிலிருந்து ஒரு கட்டத்தில் சொந்தமாகவே இயந்திரம் வாங்கி செய்யத்தொடங்கினேன். இயந்திரங்களை வாங்குவது, அதற்கான பேச்சுவார்த்தை, வேலைகளுக்காக நேரங்காலம் பார்க்காமல் அலைவது போன்ற விஷயங்களில் ஒத்துப்போகும் அளவுக்கு வீட்டினரின் ஒத்துழைப்பு இருந்தது.
பல தொழில் நிறுவனங்கள் எங்க ளிடம் டிசைனிங் மற்றும் பிரிண்டிங் வேலைகளைக் கொடுத்து வாங்குவார்கள். மேலும் தங்கள் நிறுவனத்தின் சார்பில் பலருக்கும் பல விதமான அன்பளிப்புகளை அளிக்கும் பழக்கம் வைத்திருக்கின்றன. அந்த பொருட்களில் தங்கள் நிறுவன பெயர் அல்லது லோகோவை பிரிண்ட் செய்து கொடுப்பார்கள். அந்த பிரிண்டிங் வேலைகளும் எங்களிடம் வரும். இந்த பரிசுப் பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு அவர்கள் பலரிடமும் அலைவார்கள். இந்த வேலைகளைச் செய்ய அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஈடுபடுவார்கள். இது நிறுவனங்களுக்கு தேவையில்லாத வேலை. இந்த வேலைகளுக்காக அலையும் பணி யாளர்களை சந்திக்கிறபோதுதான், இதற்குள்ளும் ஒரு தொழில் வாய்ப்பு இருக்கிறது என கண்டுகொண்டேன்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பரிசுகளை வாங்குவது ஏற்பாடு செய்து கொடுப்பது, இதில் அவர்களது நிறுவன லோகோ மற்றும் விரும்பும் பெயர்களை பிரிண்ட் செய்வது, அதற்கான பேக்கிங் என அனைத்தையும் ஒரே நிறுவனம் மூலம் இடத்தில் செய்து கொள்ளலாம். இதை மார்க்கெட்டிங் செய்ய ஒவ்வொரு நிறுவனமாக ஏறத் தொடங்கினேன்.
எனக்கிருந்த மார்க்கெட்டிங் அனுபவத்தைக் கொண்டு மீண்டும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கினேன். சிறிய நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என எல்லோருக்குமே இதற்கான தேவை இருந்தது. பலரும் எந்த தயக்கமும் இல்லாமல் ஆர்டர்களைக் கொடுத்தனர். தற்போதுகூட இந்த தொழில் ஆரம்ப வளர்ச்சியில்தான் இருந்து வருகிறது. இது எதிர்காலத்தில் மிகப்பெரிய பிசினஸ் வாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
குறிப்பாக பிரிண்டிங் வேலைகளில் நேரம்காலம் பார்க்காமல் இருந்தால்தான் நிலைக்க முடியும். இன்று ஆர்டர் கொடுத்து மறுநாளே வேண்டும் என்பார்கள் தவிர்க்க முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுணங்காமல் வேலைபார்க்க வேண்டும். பொதுவாக இந்த தொழிலை பொருத்தவரை ஆண்கள் ஆதிக்கம் நிறைந்தது. ஆனால் எனக்கு கிடைத்த பணியாளர்கள் எல்லோருமே மிகச்சிறந்தவர்களாகக் கருதுகிறேன். கிட்டத்தட்ட நான் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே உடன் இருக்கின்றனர். ஆப்செட் இயந்திரத்தை வாங்கியபோது முதலில் இயக்கிய ஆப்பரேட்டரே இப்போதுவரை அதற்கான ஆப்பரேட்டராக இருக்கிறார். அந்த அளவுக்கு நம்பிக்கையானவர்களாக இருக் கின்றனர்.
ஏதோ வாங்கினோம், கொடுத்தோம் என்றும் இருக்கக்கூடாது. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு தீர்வைக் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கிற ஆலோசனை அல்லது தீம் நிறுவனத்துக்கு பிடிக்க வேண்டும். அப்போதுதான் ஆர்டர் கொடுப்பார்கள். என்னிடம் வேலை கற்றுக்கொண்டு இதே வேலையை தனியாக செய்பவர்களும் உண்டு. ஆனால் நமது திறமை மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் புதிய போட்டிகளை மட்டுமல்ல, எத்தனை போட்டிகள் வந்தாலும் சமாளிக்கலாம். இது வளர்ந்து வரும் தொழில் வாய்ப்பு. பலருக்கும் இதில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதே என் ஆலோசனை என்றார்.