நைட்டி அணிந்து வெளியே வந்தால் ரூ.500 அபராதம். பெண்களுக்கு கட்டுப்பாடு விதித்த கிராமம்
இன்று முதல் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்கள் நைட்டி அணிந்து தெருவுக்கு வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள பெண்கள் நைட்டி அணிந்து தெருவுக்கு வரும் வழக்கம் அதிகமாகிவிட்டது. இந்நிலையில் நவிமும்பை அருகேயுள்ள கோதிவலி என்ற கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிந்து தெருவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக பெண்கள் அணியும் உடைகளே இருப்பதாக கூறி நைட்டி போன்ற உடைகளுடன் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர அந்த கிராமத்தை சேர்ந்த மகளிர் மன்றம் தடை விதித்துள்ளது.
நைட்டிக்கு விதிக்கப்பட்டத் தடை குறித்து கோதிவலி கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகததில் நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது, அதில் ”கோதிவலி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் கூறப்படுவதாது, இனிமேல் நைட்டி அணிந்து தெருவுக்கோ சாலைக்கோ வந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கிராமத்தை சேர்ந்த பல பெண்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவாகரத்தில் போலீசார் தலையிட வேண்டுமென்ற கோரிக்கையும் வலு பெற்றுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கிராமத்து மக்களை இது போன்று கட்டுப்படுத்த எந்த மகளிர் அமைப்புக்கும் உரிமையில்லை. கிராம பஞ்சயாத்துக்கும் உரிமையில்லை. எனவே இது போன்ற உத்தரவுகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.