ஃபேஸ்புக்கின் இலவச இணைய சேவைக்கு எதிர்ப்பு ஆதரவும்.
இந்தியாவில் இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் இணைய சேவை சென்று சேரவேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமமாகக் கிளம்பியுள்ளது.
இணையத்தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து எழுதிவரும் பத்ரி சேஷாத்ரி என்பவர் இதுகுறித்து கூறும்போது, ‘இந்த விஷயத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முழுமையான உண்மைகளை சொல்லவில்லை என்றும், தனது உண்மையான வர்த்தக நோக்கங்களை வெளிப்படையாக கூறாமல் இலவச சேவையை தொண்டு நோக்கில் செய்வதாகக் கூறும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு நம்பும்படியாக இல்லை என்று கூறியுள்ள அவர் ‘அதேசமயம், இதுவரையில் இணையமே அறியாத, இணையம் குறித்து அறிவதற்கும், ஏழ்மை காரணமாக இணையத் தொழில்நுட்பத்தை இதுவரை பயன்படுத்தாத கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் ஃபேஸ்புக் முயற்சியை முற்று முழுதாக நிராகரிப்பதும் புறந்தள்ளுவதும் சரியல்ல என்றும் கூறுகிறார்.
ஆனால் இந்த இலவச சேவையை எதிர்ப்பாளர்கள் இதுகுறித்து கூறும்போது, “இப்படியான கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை என்பது இணையத்தின் பொதுத்தன்மையை, சமநிலையைக் குலைத்துவிடும் என்றும் இணையத்தில் செயற்படும் வணிக, வர்த்தக நிறுவனங்கள் அனைத்துக்கும் இதில் வாய்ப்பளிக்கப்படாது என்பதால் இணைய வர்த்தகவெளியை இது சமனற்றதாக மாற்றிவிடும் என்றும் அனைவருக்கும் பொதுவான இணையத்தை ஃபேஸ்புக் தனது வர்த்தக நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தும் சூழலுக்கு இது வழி வகுக்கும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் பெருமளவில் எழுந்துள்ள இந்த சர்ச்சை குறித்து நீங்களும் உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.
Chennai Today News: Facebook fights for free Internet in India, global test-case