மதுவை ஒழிக்க வேண்டுமானால் திமுக, அதிமுகவை ஒழிக்க வேண்டும். வைகோ
திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணியை ஆரம்பித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த வைகோ, தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் ஒழிந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும் என்றும் அதற்கு மக்கள் நலக்கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: அண்ணா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, அதிமுக கட்சிகள் இப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளன. தமிழக அரசியலில் மாறுதல் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. மதுவை இரண்டு கட்சிகளும் ஒழிக்காது. ஊழல், மது இரண்டையும் தமிழகத்தில் ஒழிக்க திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது.
எனவேதான், மக்கள் நலனைக் காக்க இந்த இரண்டு கட்சி ஆட்சி ஏற்படக்கூடாது என்ற எண்ணம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மக்களிடையேயும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில் இப்படியொரு நிலைப்பாடு ஏற்படவில்லை. எனவே, இதுவரை இல்லாத ஒரு புதிய பரிமாணம் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி மலர கூட்டணி அரசுதான் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்து, நான்கு கட்சிகளும் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும்.
பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதோடு, மதச்சார்பின்மை தன்மைக்கே இடமில்லாமல் போய்விட்டது. இந்த நிலைப்பாடு காரணமாகத்தான் பிகார் மாநிலத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. இதுபோல் தமிழகத்திலும் பாஜக காலூன்ற முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்திருந்தபோதுதான், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்க்கும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது வாயே திறக்காமல், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிக்கு தடைபோட திமுக-வும் உடன்பட்டு இருந்தது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் என தொடர்ந்து கூறி வருவதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் நம்பிக்கை உள்ளது.
தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது என்பது மரபு அல்ல. ஜனநாயகத்தில் அதற்கு இடமில்லை. தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மையுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வரைத் தேர்வு செய்வார்கள். மக்கள் நலக் கூட்டணி இதில் உறுதியாக உள்ளது.