கார் விற்பனை அதிகரிப்பு

driverless carமுன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
 கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம், டிசம்பர் மாதத்தில் 1,19,149 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, 2014 டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (1,09,791 கார்கள்) விட 8.5 சதவீதம் அதிகம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி டிசம்பரில் 33.1 சதவீதம் சரிவடைந்து 11,982 என்ற எண்ணிக்கையிலிருந்து 7,816-ஆக குறைந்துள்ளது.
 ஹுண்டாய்: ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் (எச்எம்ஐஎல்) கார்கள் விற்பனை சென்ற டிசம்பரில் 7.98 சதவீதம் அதிகரித்து 64,135-ஆக வளர்ச்சி கண்டுள்ளது. 2014 டிசம்பரில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 59,391-ஆக இருந்தது.
 அதேசமயம், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 17.15 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 26,887 என்ற எண்ணிக்கையிலிருந்து 22,274-ஆக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மஹிந்திரா: மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற டிசம்பரில் 37,915-ஆக அதிகரித்துள்ளது. இது, 2014 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (36,328 கார்கள்) காட்டிலும் 4 சதவீதம் அதிகம். இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 65 சதவீதம் உயர்ந்து 3,076ஆக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 ஃபோர்டு இந்தியா: பல நிறுவனங்களின் கார் விற்பனை வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 24 சதவீதம் சரிவடைந்து, 10,865-ஆக குறைந்துள்ளது. 2014 டிசம்பரில் இந்நிறுவனம், 14,401 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதியும் 53.59 சதவீதம் வீழ்ச்சி கண்டு 10,647 என்ற எண்ணிக்கையிலிருந்து 4,941-ஆக குறைந்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 ராயல் என்ஃபீல்டு: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்ற டிசம்பரில் 40,453 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது, 2014 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (28,634 மோட்டார் சைக்கிள்கள்) விட 41 சதவீதம் அதிகமாகும்.
 அதேசமயம் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 9 சதவீதம் சரிவடைந்து 416-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply