இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு ஏ.பி.பரதன் மறைவு. தலைவர்கள் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு ஏ.பி.பரதன் அவர்கள் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்து கொள்கிறேன்.
தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வில் ஏ.பி.பரதன் தன்னலம் கருதாது, உழைக்கும் வர்க்கத்துக்கும், ஏழைகளுக்கும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கும் பாடுபட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனைகள் ஏற்பட்ட போது, பல்வேறு அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் அவருடைய பேச்சுவார்த்தை திறமை முக்கிய பங்கு வகித்தது.
அரசியல் வாழ்வில் நாகரீகமாகவும், தன்னலமற்ற பணிகளையும் மேற்கொண்டவர். அவரோடு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு தருணங்களில் என்னுடைய இல்லத்துக்கு அவர் வந்திருக்கிறார். அவருடைய இழப்பு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும். என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், என்னுடைய நெருங்கிய நண்பருமான ஏ.பி.பரதன் அவர்கள், மறைந்துவிட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
பங்களா தேசத்தை பூர்வீகமாகக் கொண்ட மிகப் பெரிய செல்வாக்குப் பெற்ற குடும்பத்தில் பிறந்த பரதன் அவர்கள், 1957ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றுக்குரியவர்.பொதுவுடைமைச் சித்தாந்தங்களில் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டால், இளம் வயதிலேயே தம்மை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர்!
கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தோழமையாக இருந்த காலத்திலும், அரசியல் களத்தில் எதிரணியில் இருந்த காலத்திலும், கழகத்துடனும், என்னுடனும் நல்ல தோழமையுடன் பழகும் சிறந்த பண்புக்குரியவராக அவர் விளங்கினார் எனின், அது மிகையல்ல,
கழகத்தை எந்நாளிலும் மதிக்கும் ஒரு தலைவராக விளங்கியவர் பரதன். அவரது மறைவால் ஒரு சிறந்த நண்பரை நான் இழந்து விட்டேன்.”
டாக்டர் ராமதாஸ்: கடந்த 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 4.5 ஆண்டு காலம் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்த பரதன் அடித்தட்டு மக்களுக்காகவே தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தார்.
ரயில்வே தொழிலாளர்கள், ஜவுளித் தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காக போராடி ஏராளமான உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர்.
பரதனின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பொதுவுடைமைத் தோழர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
வைகோ: மார்க்சிய, லெனினியக் கொள்கை கோட்பாடுகளில் அவருக்கு இருந்த ஆழ்ந்த படிப்பறிவும், புரிதலும் அவரை மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆக்கியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து, இடதுசாரிகளின் ஒற்றுமையும், முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒன்றிணைவும், இந்திய அரசியலில் காலத்தின் கட்டாயத் தேவை என்பதை தோழர் ஏ.பி.பரதன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது போரை நிறுத்த வலியுறுத்தி டெல்லியில் மறுமலர்ச்சி திமுக நடத்திய உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை மறக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முத்தரசன்: தோழர் பரதனுக்கு செவ்வணக்கம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் புதுதில்லி மருத்துவ மனையில் இன்று மாலை காலமானார்.அவரது உடல் நாளை மறுநாள் 4.1.16 அடக்கம் செய்யப்படும். அவரக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார துக்கம் கடைபிடிக்கிறது.கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.