நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு ஏன்? திடுக்கிடும் புதிய தகவல்
விரைவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சிவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தனித்தோ, அல்லது பாஜகவுடன் இணைந்தோ அல்லது மக்கள் நல கூட்டணியுடன் இணைந்தோ போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவின் கூட்டணி வியூகம் அமைக்கப்படும் என தெரிகிறது. தேமுதிக, காங்கிரஸ் ஆகியவை திமுக கூட்டணியில் இணைந்தால் அதிமுக மக்கள் நலக்கூட்டணியுடனும், மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்தால் தனித்தும் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் திமுகவை விமர்சிக்கும் முதல்வர் மக்கள் நலக்கூட்டணியை விமர்சனம் செய்வது இல்லை. அந்த கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன், மற்றும் கம்யூனிஸ்டுகள் ஒருகாலத்தில் அதிமுக ஆதரவாளராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக துணை பொதுத் செயலாளரான நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் நல கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார். மக்கள் நல கூட்டணி ஒரு வெத்து வேட்டு எனும்விதத்தில் மதிமுக தன்னால்தான் வளர்ச்சி பெற்றதாகவும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
மேலும் வைகோ குறித்து அவர் கூறியபோது, ” மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வைகோ. அவருக்கு கட்சினு ஒன்று தமிழ்நாட்டுல இருக்குதா?. அந்த கட்சியை ஊர் ஊராக சுமந்தவன் நான். அந்த கட்சிக்கு வானமும் சிறகுமாக இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்ற விபரம் வைகோவுக்கு தெரியாது. அந்த கட்சி தரை மட்டமாகி விட்டது தமிழ்நாட்டில் வரவில்லாத ஒரே கட்சி மதிமுகதான். சங்கரன்கோவிலில் அவரது சொந்த தொகுதியில், வைகோவை ஆதரித்து வீதி வீதியாக பேசியவன் நான். அங்கேயே கரை சேர முடியதவர் வைகோ ” என்றார்.
வைகோவை மட்டுமல்ல மற்ற மக்கள் நல கூட்டணித் தலைவர்களையும் விமர்சிக்க நாஞ்சில் சம்பத் தவறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியையும் கூட நாஞ்சில் சம்பத் கடுமையாக தாக்கிப் பேசினார். சூழலுக்கு தக்க பேசுவோம், என்று அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், நாஞ்சில் மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசியதை அதிமுக தலைமை விரும்பவில்லை என்றும் அதனால்தான் அவருடைய பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Chennai Today News: Why ADMK action against Nanjil Sampath?