வட மாநிலங்களில் பூகம்பம். மேற்பார்வையிட ராஜ்நாத் சிங்கை அனுப்புகிறார் மோடி
மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மேற்குவங்கம், நாகலாந்து, மணிப்பூர், உட்பட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேசத்திலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அசாம் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் அழைத்து வடமாநிலங்கள் நிலவரம் குறித்து மேற்பார்வையிட கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரதமரின் ஆலோசனைப்படி அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் வட மாநிலங்களுக்கு பூகம்ப பாதிப்புகளை மேற்பார்வையிட கிளம்பவுள்ளதாக உள்துறை அமைச்ச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.