(05.01.16) – சஃபலா ஏகாதசி

1936498_1064801636905294_1923309661263111835_n

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஒ யுதிஷ்டிரா !! இந்த சஃபலா ஏகாதசி விரதமானது இறைவன் ஸ்ரீஹரிக்கு மிகவும் பிரீதியானது. இந்த விரதத்தினை கடைபிடிப்பதன் மூலம் அவரின் அருளை எளிதில் பெற முடியும். இந்நாளில் நாம் பிரபு நாராயணரை வணங்க வேண்டும்.

ஒ தர்மபுத்திரா !! ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் இறைவன் ஸ்ரீஹரிக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆகிறார்கள். இந்த சஃபலா ஏகாதசி நாளன்று இறைவனுக்கு எலுமிச்சை, தாம்பூலம், தேங்காய், மற்றும் மாதுளங்கனி, கொய்யா போன்ற கனிகளை படைத்து வணங்க வேண்டும்.

சஃபலா ஏகாதசியன்று இரவு கண்விழித்து விரதம் மேற்கொள்பவர் அடையும் புண்ணியமானது ஒரு மனிதன் பூமியில் 5000 ஆண்டுகள் தவம் செய்து பெரும் புண்ணியத்திற்கு இணையானது என்றார். ஹே யுதிஷ்டிரா !! இப்போது இந்த சஃபலா ஏகாதசி விரதத்தின் கதையை கவனமுடன் கேள் !! என்று கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் சம்பாவதி என்னும் நகரை ராஜா மஹிஷ்மான் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனுக்கு 4 புதல்வர்கள். அவர்களில் மூத்தவனான லும்பகன் மிகவும், பாபியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான். பிற பெண்களின் மீது மோகம் கொண்டு, விபச்சாரிகளின் இல்லங்களில் தந்தையின் செல்வதை வியர்த்தமாக்கிக் கொண்டிருந்தான்.

தெய்வம், மற்றும் பிராமணர்களை அவமதித்து வந்தான். இளவரசன் என்ற காரணத்தினால் அவனுடைய அராஜகங்களை முறையிட பயந்து கொண்டு மக்கள் அவனுடைய துர்நடத்தையை சகித்துக் கொண்டிருந்தனர்.

ஆயினும் எல்லை மீறிய அவனது அராஜகங்களைப் பற்றி 1 நாள் அரசனுக்கு தெரிய வந்தது. அதைக் கேள்வியுற்று வருத்தமும், ஆத்திரமும் கொண்ட அரசன் அவனை நாட்டை விட்டு விளக்கி வைத்தான். அதனைக் கண்ட மக்களும் அவனை ஒதுக்கி விலக்கினர்.

எங்கு செல்வது என்று தெரியாமல் மிகவும் வேதனைப்பட்ட போது இறுதியாக இரவு நேரங்களில் தனது தந்தையின் நகரத்தில் கொள்ளையடிப்பது என்று முடிவு செய்து பகலில் நாட்டை விட்டு விலகி இருந்து விட்டு இரவில் கொள்ளை அடிப்பது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வந்தான். காவலர்கள் அவனைப் பிடித்த போதிலும் ராஜபயத்தின் காரணமாக அவனை விட்டு விட்டனர்.

சில சமயம், அறியாமல் நாம் செய்யும் காரியங்கள் நம்மை இறைவனின் அருளுக்கு பாத்திரமாக்கும். அப்படி 1 சம்பவம் லும்பகனின் வாழ்விலும் நடந்தது. அவன் வசித்து வந்த அந்த வனமானது அரசமரங்கள் சூழ்ந்த இறைவனுக்கு மிகவும் பிரியமானதாக இருந்தது. அவ்வனத்தை மக்கள் இறைவனின் வசிப்பிடமாக கருதினர். அதனை அறியாத லும்பகன் அங்கே 1 அரசமரத்தடியில் வசித்து வந்தான்.

அவன் அங்கே தங்கியிருந்த காலத்தில் சஃபலா ஏகாதசிக்கு முந்தைய தசமி நாளில் லும்பகன் உடுக்க உடையின்றி, குளிர் தாங்க முடியாமல் மூர்ச்சையடைந்து அந்த மரத்தின் கீழ் விழுந்தான். குளிர் தாங்க முடியாமல் அன்றைய இரவை மிகவும் கஷ்டத்துடன் கழித்தான்.

ஏகாதசி நன்னாள் தோன்றியது. அன்று சூரியன் உதித்த போதும் கூட அவனுக்கு மயக்கம் தெளியவில்லை. அங்கேயே விழுந்து கிடந்தான்.

அன்று பிற்பகல் வரை லும்பகன் எழுந்து நடமாட முடியாமல் தவித்தான். பிற்பகலில் சூரியக் கதிர்கள் மேலே பட்டபோது அவன் தட்டுத்தடுமாறி எழுந்தான்.பசி மயக்கத்தினால் உணவைத் தேடி அங்குமிங்கும் அலைந்தான். அன்று வேட்டையாட சக்தி இல்லாததால் கீழே ஆங்காங்கே கிடந்த கனிகளைக் கொண்டு வந்து அந்த மரத்தடியில் அமர்ந்தான்.

அச்சமயம் சூரியன் அஸ்தமனமாகத் தொடங்கியது.
நாள்தோறும் மாமிசங்களை உண்டு வந்த லும்பகனுக்கு அந்தக் கனிகளை சுவைக்க முடியாமல் அதனை கீழே வைத்துவிட்டு “ஹே பகவானே !! உனக்கு இந்தக் கனிகளை சமர்பிக்கிறேன். இதனை ஏற்று கொண்டு நீயே திருப்தி அடைவாயாக !! என்று கூறி தன விதியை எண்ணி அழுதான்.

அவனுடைய கம்பளி கிழிந்திருந்ததால் இரவில் குளிர் தாங்க முடியாமல் நித்திரையின்றி தவித்தான். இப்படியாக இளவரசன் லும்பகன் அவனை அறியாமலேயே சஃபலா ஏகாதசி விரதத்தினை அனுஷ்டித்து முடித்தான்.

அவன் இரவெல்லாம் கண்விழித்து விரதம் கொண்டது கண்ட இறைவன் ஸ்ரீஹரி மகாவிஷ்ணு பேரானந்தம் கொண்டு அவனது பாபங்கள் அனைத்தையும் அழித்து அவனை துர்கர்மாவிலிருந்து விடுவித்தார்.

காலையில் வானிலிருந்து 1 திவ்யரதம் அவனிடம் இறங்கி வந்தது. அதைக் கண்டு அவன் அதிசயித்த போது, வானில் அசரீரி தோன்றியது : “ஹே லும்பகா !! அறியாமல் நீ அனுஷ்டித்த இந்த சஃபலா ஏகாதசி விரதத்தினை இறைவன் ஸ்ரீஹரி முழுமையாக ஏற்றுக்கொண்டு உனது பாவங்களை அழித்துவிட்டார். இனி நீ உன் தந்தையிடம் சென்று உனது ராஜ்ய பொறுப்புகளை நடத்து !!” என்றது.

அவனுக்கு புதிய சக்தி பிறந்தது. அவன் மீது புதிய பட்டாடைகள் தோன்றின. அசரீரி கூறியதைக் கேட்ட லும்பகன் அகமகிழ்ந்து ஜெய் ஜெய் நாராயணா !! என்று உரக்கக் கூவினான். பின்பு ரதத்தில் ஏறிச் சென்று தன தந்தையிடம் நடந்ததைக் கூறி அரசாட்சியினை ஏற்று சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான்.

அவனது சந்ததியினர் அனைவரும் ஹரிபக்தி கொண்டு விளங்கி, இறுதியில் பரமபதத்தினை அடைந்தான்.

இவ்வாறு கூறிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இறுதியாக எவரொருவர் பக்தியுடன் இவ்விரதத்தை இருக்கிறாரோ அவர் முக்தி அடைவதோடு மட்டுமின்றி இந்தக்கதையை கேட்பவர்/படிப்பவர்/சொல்பவர் அனைவரும் இராஜசூய யாகப்பலனைப் பெறுவர் என்றார்.

*** ஓம் நமோ பகவதே வாசுதேவாய ***

Leave a Reply