`சமீபத்திய வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகு, `அரும்பாடுபட்டு கட்டின வீடு தண்ணியில செதஞ்சு போச்சே…’, ‘டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்னு சிறுகச் சிறுக சேமிச்சு வாங்கின பொருட்களை எல்லாம் வெள்ளம் உருக்குலைச்சுடுச்சே…’, ‘போன மாசம்தான் கார் லோன் முடிஞ்சது. இப்போ காரே வெள்ளத்துல போயிருச்சு…’, ‘கண்ணு முன்னால இந்த பாழாப்போற தண்ணி என் பையனை அடிச்சிட்டுப் போயிருச்சு…’ என மக்களின் அழுகுரல்கள் ஆங்காங்கே எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன இன்னமும்! இன்னொரு பக்கம், சாதி, மதம், இனம் எல்லாம் மடிந்து மனிதம் மட்டுமே மலர்ந்து, சந்து, பொந்துகள்கூட விடாமல் உதவிக்கரங்கள் நீண்டுவருகின்றன. அந்த மக்களுக்குத் தேவை… பொருளாதார சீரமைப்பு மட்டுமல்ல; மனச்சீரமைப்பும்தான்!’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அபிலாஷா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னம்பிக்கை எனும் மாமருந்து ஊட்டும் விதமாக இங்கே பேசுகிறார்…
‘‘உடைமைகளில் இருந்து உறவுகள் வரை… இந்த மழை பறித்துக்கொண்டது கொஞ்சநஞ்சமல்ல! ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி மட்டுமே மனமெங்கும் பூதமாக எழுந்து நிற்கும் பலருக்கு. ‘இன்னிக்கும் நாளைக்கும் யாராச்சும் உணவு கொடுக்கலாம். ஒரு வாரத்துக்கு இருக்க இடம் கொடுக்கலாம். அதுக்கு அப்புறம்?’ என்று சிந்திக்க ஆரம்பித்தால், அந்தக் கேள்வி பயமுறுத்துவதாக இருக்கும்.
பேரிடர் பாதிப்பு என்பது, மிகவும் பரிதாபமான ஒரு விஷயம்தான். ஆனால், ஒன்று நினைவில் இருக்கட்டும்… எந்தப் பிரச்னையில் இருந்தும் நம்மை மீட்கக் கூடியது, ஆயுளின் இந்த நாள் வரை தடைகள் பல தாண்டி அழைத்து வந்து நிறுத்தியிருப்பது… சம்பாதித்த ஆயிரங்களோ, லட்சங்களோ அல்ல; நம் தன்னம்பிக்கையும், முயற்சியும் மட்டுமே. அவை ஈட்டித் தந்ததுதான், வெள்ளம் அடித்துச் சென்ற வீடும், காரும்!
‘இப்போ புதுசா நாங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும்’… உண்மைதான். கையில், வீட்டில், இருப்பில் எதுவுமே இல்லைதான். ஆனால், உங்கள் மனதில் இருக்கிறது வலு. அதை உணர்ந்ததால்தான், இந்த வெள்ளத்தில் தங்கள் உடைமைகளை இழந்த நிலையிலும், மக்கள் சிலர், ‘ஓ.கே… போயிருச்சு. இனி ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, அடுத்து என்னனு யோசிக்க வேண்டியதுதான் இந்த நொடியின் அவசியம்!’ என்பதை உணர்ந்து, தங்களைப் போலவே நிர்க்கதியாக நிற்கும் மற்ற மக்களின் நிவாரணப் பணிகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களைக் காலத்தால் பயமுறுத்த முடியாது. காரணம், அவர்கள் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு, நிகழ்காலத்தைக் கடந்து, எதிர்காலத்தைச் சந்திக்கத் தயாராகிவிட்டார்கள். அவர்களின் ஒரே அச்சாணி… அவர்களேதான்! ‘நான் இருக்கேன் எனக்கு!’ என்ற வாழ்வின் பெரும் உண்மையை இந்த வெள்ளத்தால் உணர்ந்தவர்கள் அவர்கள்.
உலகப் போர்களில் பொழிந்த குண்டுகளால் புல், பூண்டுகூட அழிந்த போன நாடுகள் எல்லாம் மீண்டு வந்திருக்கும்போது, அறிவாற்றலுக்கும் உடல் உழைப்புக்கும் பெயர் பெற்ற நாம், வெகு சீக்கிரமே, முன்பைவிட வேகத்துடன், முன்பைவிட சிறப்பான ஒரு நிலையை எட்டுவோம்.
இந்த வெள்ளம், பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் சிலரைப் புரட்டிப் போட்டிருக்கும். வீட்டில் தனித்திருக்கும்போது, அந்த வெள்ளக் காட்சிகள் நினைவில் வந்து மிரட்டலாம். தூக்கம் தொலைக்கலாம். கண் அயர்ந்தாலும், கனவில் பேய்மழை கொக்கரிக்கலாம். கண்ணுக்கெதிரே கணுக்காலில் இருந்து கழுத்தளவுக்கு தண்ணீர் ஏறி வந்து கொல்லப் பார்த்த நினைவுகள் மனதை அவ்வப்போது அதிர வைக்கலாம். வெள்ளத்தில் மிதந்து வந்து ரோட்டோரம் ஒதுங்கியிருந்த உடல், நனவிலும் தொந்தரவு செய்துகொண்டே இருக்கலாம். குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் இவ்வித மனபாதிப்புகளுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்களுக்குத் தேவை… சுற்றியிருப்பவர்களின் அரவணைப்பும் ஆறுதலும். ‘இது நூறாண்டு வெள்ளம். நம் ஆயுளில் இனி ஒரு தடவை வர வாய்ப்பில்லை’ என்று பாசிட்டிவாக பேசி, மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்களை மீட்க வேண்டும். தேவைப்பட்டால்… மனநல கவுன்சலிங்குக்கு அழைத்துச் செல்லலாம்.
வீழ்வதெல்லாம் எழுவதற்கே தவிர வேறொன்றும் இல்லை உயிர்க்கு