சர்க்கரை நோயாளிக்கான பயனுள்ள தகவல்கள்
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,000 சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். ‘அடுத்த 15 ஆண்டுகளில் இது 10 கோடி என்ற அளவைத் தாண்டிவிடும்’ என சுகாதார ஆய்வுகள் அலறுகின்றன. `சர்க்கரை மிக வேகமாகப் பரவிவரும் தொற்றா நோய்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். சர்க்கரை என்ன அவ்வளவு கொடியதா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக. ஆனால், சர்க்கரை நோயால் நம்முடைய மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையையோ வாழும் காலத்தையோ குறைக்க முடியாது என்பதுதான் உண்மை.
`அந்தக் காலத்தில் எல்லாம் சர்க்கரை நோய் பற்றிய கவலை இல்லாமல் இருந்தார்களே, இப்போது என்ன புதிதாக இவ்வளவு விழிப்புஉணர்வு, செய்திகள்…’ எனப் பலரும் எண்ணுகின்றனர். உண்மையில், இது ஆதிகாலம் தொட்டே இருந்துவருவது. எகிப்து பிரமிடுகளில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளில், அந்தக்கால அரசர்களுக்கு சர்க்கரை நோய் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில், கி.மு 400 – 500களில் வாழ்ந்த சுஷ்ருதர் மற்றும் சரகர் போன்றோர் சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்திருக்கிறார்கள். இவர்கள், சுறுசுறுப்பின்றி, மந்தமான வாழ்க்கை வாழ்பவர்கள், அதிக உடல் எடை மற்றும் அதிக இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். சர்க்கரை நோயாளிகளின் சிறுநீரில் இனிப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், எறும்புகள் அதை மொய்கின்றன. இதைக்கொண்டு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்திருக்கிறார் சுஷ்ருதர். சர்க்கரை நோயாளிகளின் சிறுநீரில் இனிப்புத்தன்மை அதிகமாக இருக்கும் என்று 9-10ம் நூற்றாண்டு அரேபிய மருத்துவப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் பாதிப்பைத் தவிர்க்க, தடுக்க முடியும். இதற்கு, சர்க்கரை நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டிய பஞ்ச தந்திரங்கள்…
1 மருத்துவக் குழு ஆலோசனை
உங்கள் சர்க்கரை நோய் மருத்துவரிடம் மட்டும் ஆலோசனை பெற்றால் போதுமானது இல்லை. உணவு, ஊட்டச்சத்து நிபுணர், இதய சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர், பாதங்களுக்கான சிறப்பு மருத்துவர், பல் மருத்துவர் என ஒரு மருத்துவக் குழுவினரோடு இணைந்து, முறையான பரிசோதனை செய்துவருவதன் மூலம், ஆரோக்கியமான வாழ்வைத் தொடர முடியும்.
2 சர்க்கரை நோயைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்
நம்முடைய உடலில் என்ன பிரச்னை ஏற்பட்டிருக்கிறது, எது தவறாகச் செயல்படுகிறது என்ற அடிப்படை உண்மைகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏன் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, என்ன செய்தால் கட்டுக்குள் இருக்கும், எது எல்லாம் பாதிப்பை அதிகரிக்கும் எனத் தெரிந்து கொண்டோம் என்றால், சர்க்கரையை வெல்ல ஒவ்வோர் அடியையும் கவனத்துடன் எடுத்துவைக்க முடியும்.
3 சர்க்கரை அளவைக் கண்காணித்தல்
சர்க்கரை அளவின் ஏற்ற இறங்கங்களைக் கண்காணிக்க வேண்டும். அதை எப்படி இயல்புநிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பது அவசியம்.
4 தினசரி எதைத் தேர்வுசெய்வது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!
சர்க்கரை அளவைக் குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க, அன்றாட வாழ்வை நாம் எப்படி வாழ்கிறோம், என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை உணர்ந்திருப்பது அவசியம். எவை எல்லாம் தவிர்க்க வேண்டிய உணவுகள், எதை எல்லாம் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம், எந்த மாதிரியான பயிற்சி நம் உடலுக்குத் தேவை என ஒவ்வொன்றையும் அறிந்து, அவற்றைத் திட்டமிட்டுச் செய்தால், சர்க்கரையை வெல்ல முடியும்.
5 தொடர் பரிசோதனைகளைத் தெரிந்திருக்க வேண்டும்
சர்க்கரை நோய், ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் அதிகரிப்பது இல்லை… இதயம், சிறுநீரகம், கண், கால் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கிறது. இந்த பாதிப்புகள் நம்மை நெருங்காமல் காக்க, சர்க்கரை அளவை மட்டும் கட்டுக்குள்வைத்தால் போதாது. கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள்வைக்க வேண்டும். தொடர் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதன் மூலம், பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்தலாம்.