சென்னை தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். பெற்றோர்கள் அதிர்ச்சி

சென்னை தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். பெற்றோர்கள் அதிர்ச்சி
bomb
சென்னை அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர்களால்  வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டதால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பள்ளிகளில் குவியத்தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் தகவல் வெளிவந்தவுடன் உடனடியாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம மனிதன் ஒருவன்,  “கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளி உள்பட, செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும்  அனைத்து பள்ளிகளையும் வெடி குண்டு வைத்து  தகர்க்கப் போகிறோம்” என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளான். போன் மிரட்டலை அடுத்து சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூம் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தலைமையில் போலீசார், கேளம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்கு வெடிகுண்டு ஆய்வு நிபுணர்களுடன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். ஆனால் பலமணி நேரம் தேடியும் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

வெடிகுண்டு தகவல் மிக வேகமாக வாட்ஸ் அப்பில் பரவியதால் உடனடியாக் பள்ளி முன் குவிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல பதட்டத்துடன் குவிந்தனர். போலீசார் அவர்களுக்கு ஆறுதல் கூறி,  அங்கிருந்து பாதுகாப்பாக  அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சென்னை மயிலாப்பூர், திருவள்ளூர் போன்ற இடங்களில் இயங்கிவரும் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவன பள்ளிகளுக்கும் இந்த தகவல் போய்விட, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் 7 பள்ளிகளுக்கும் பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

கூடுதல் கல்விக் கட்டணத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது தேர்வுக்குப் பயந்த மாணவர்கள் இந்த மிரட்டல் வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  ‘இப்போதைக்கு தீவிரவாத மிரட்டல் போன்ற விஷயமாக இதைக் கருதவேண்டியது இல்லை’ என்பதையும் போலீசார் உறுதியாகத் தெரிவிக்கின்றனர். மேலும் வாட்ஸ் அப்பில் வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று  பொதுமக்களை சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply