பஞ்சாப் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடும் ஒரு காரணம். ராணுவ அமைச்சர் ஒப்புதல்

பஞ்சாப் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடும் ஒரு காரணம். ராணுவ அமைச்சர் ஒப்புதல்
manohar
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே நேரம் இந்திய பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கி சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. வேறு தீவிரவாதிகள் யாரும் விமான தளத்துக்குள் பதுங்கி இருக்கின்றனரா? என்ற தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று பதான்கோட் விமானப்படை தளத்திற்கு நேரில் சென்று தாக்குதல் நடந்த இடங்களை பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”தீவிரவாதிகளுடன் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய சண்டை 36 மணி நேரம் நீடித்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். ஆனாலும், தேடுதல் வேட்டை இன்னும் தொடர்கிறது. இப்போதைக்கு விமானப்படை தளத்துக்குள் சந்தேகப்படும்படியாக யாரும் இல்லை. இன்றுக்குள் தேடுதல் வேட்டை முடிந்துவிடும்.

விமானப்படை தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் 40 முதல் 50 கிலோ வரையிலான தோட்டாக்கள், குண்டுகளை வீசக்கூடிய சிறிய ரக பீரங்கிகள், கையெறி குண்டுகளை வீசும் லாஞ்சர்கள், ஆயுத பெட்டிகள் ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர். மரணம் அடைந்த படை வீரர்கள் அனைவரும், போர்க்களத்தில் மரணம் தழுவிய தியாகிகளாக கருதப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். வீரர்களின் தியாகம் போற்றுதலுக்கு உரியது.

இந்த சம்பவத்தில் சில குளறுபடிகள் இருந்ததை காண முடிகிறது. ஆனாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை பொறுத்தவரை அதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். இதுபற்றிய விசாரணை முடியும்போது அனைத்தும் தெளிவாகத் தெரிய வரும். 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும், 24 கி.மீ. தூர சுற்றளவுக்கு பாதுகாப்பு சுவரும் கொண்ட பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளது கவலை அளிக்கும் விஷயம். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்திய சில வகை ஆயுதங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் இங்கே விவாதிப்பது சரிஅல்ல. விசாரணைக்காக அவை பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply