உப்புமூட்டைகளுக்கு நடுவே மணல். நூதன கடத்தலில் ஈடுபட்ட 3 லாரிகள் பறிமுதல்
மணல் கொள்ளையை சட்டம் போட்டும் திட்டம் போட்டும் காவல்துறையினர் தடுத்து வந்தாலும் மணல் கொள்ளையர்கள் புதுப்புது வகைகளில் தங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ஏராளமான மணல் லாரியில் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து உப்பு லோடு ஏற்றிச்சென்ற மூன்றூ லாரிகளை போலீஸார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது உப்பு மூட்டைகளுக்கு நடுவே மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கிளம்பிய ஐம்பது டன் எடையுடன் கூடிய மூன்று லாரிகள், இன்று காலை கர்நாடகாவை நோக்கி பயணிப்பதாக ஈரோடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆசனூர் எனும் ஊரில் அந்த லாரிகளை போலீஸார் மடக்கிப்பிடித்து சோதனை செய்து பார்த்தபோது மேலே உப்பு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த லாரியின் மத்திய பகுதியில், காய்ந்த மணலை கொட்டி, அதன்மேல் தார்பாலின் போட்டு பக்காவாக மூடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட லாரிகள் அனைத்தும் 14 டயர்களை கொண்டது. இந்த லாரிகள், நாமக்கல்லில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. லாரிகளை ஓட்டிச்சென்ற பிரபாகரன், அண்ணாதுரை ஆகிய இரண்டு டிரைவர்களையும் கைது செய்த காவல்துறை அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. லாரியின் உரிமையாளர்களான பாலசிங்கம், ராஜசிங்கம் ஆகிய இருவரும் தலைமறைவாகியிருக்கிறார்கள்.
Chennai Today News: Sand mafia’s innovative technique for smuggling sand