அதிமுக அரசு மீது 25 ஊழல் குற்றச்சாட்டுக்கள். பட்டியலிட்டார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
அதிமுக அரசு மீது பலவித ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களின் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிமுக அரசு மீது 25 புதிய ஊழல் குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டுள்ளார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு பட்டியலில் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை, மின் கொள்முதல் ஊழல், உயர்கல்வித்துறை ஊழல், ஆவின் பால் கலப்பட ஊழல், பாதாள சாக்கடை ஊழல், டாஸ்மாக் ஊழல், பத்திர பதிவுத்துறை ஊழல், ரியல் எஸ்டேட் ஊழல், கிரானைட் ஊழல், லேப்டாப் ஊழல், மருத்துவத்துறை ஊழல் உள்ளிட்ட 25 ஊழல் குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், “அ.தி.மு.க அரசு மீது 25 ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே ஆளுநரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் நாங்கள் அளித்த ஊழல் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்’ என்று கூறினார்.