பஞ்சாப் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் மனைவிக்கு அரசு வேலை. ரூ.50 லட்சம் நிதியுதவி. உம்மன்சாண்டி அறிவிப்பு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி வீரமரணம் அடைந்த லெப்டினென்ட் கர்னல் நிரஞ்சன்குமார் அவர்களின் குடும்பத்தை கேரள அரசு தத்தெடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பலியான ராணுவ வீரர்களில் வீர மரணம் அடைந்தவர்களில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன்குமார் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவரது இறப்பால் அவரது குடும்பம் மட்டுமின்றி கேரள மாநிலமே சோகத்தில் ஆழ்ந்தது.
இந்நிலையில் வீரமரணம் அடைந்த நிரஞ்சன்குமாருக்கு மனைவி மற்றும் 2 வயதில் மகள் உள்ளார். நிரஞ்சன்குமாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது குடும்பத்தை கேரள அரசு தத்தெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி நிரஞ்சன்குமாரின் மனைவி டாக்டர் ராதிகாவிற்கு அரசுப்பணி வழங்கும் என்றும் அவரது மகளின் படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று கூறினார்.
இதுமட்டுமின்றி நிரஞ்சன்குமாரின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிதிஉதவியும் அறிவித்துள்ள முதல்வர் உம்மன்சாண்டி, பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒரு அரங்கத்திற்கு அவரது பெயரை சூட்டவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கேரள அரசு ஐடிஐ ஒன்றிற்கு நிரஞ்சன்குமார் பெயர் சூட்ட அரசு அறிவித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.