ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியா?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியா?

JKஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சயீத் திடீரென காலமானதை அடுத்து அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக அவரது மகள் மெகபூபா முஃப்தி இன்று அல்லது நாளை பதவியேற்பார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில், மெகபூபா முதல்வர் உடனடியாக பதவியை ஏற்க மறுப்பதாகவும் தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்தபின்னரே தன்னால் பதவியேற்க முடியும் என்று கூறியதாகவும், இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒருசில நாட்கள் மட்டும் ஜனாதிபதி ஆட்சி அமலாகக் கூடும் நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ.க. இணைந்து கூட்டணி அரசை அமைத்து ஆட்சி செய்து வந்தது. முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சயீத் பதவியேற்று ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அவர் காலமானார். இதனைத் தொடர்ந்து முப்தி முகமது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, அம்மாநில முதல்வராக பதவியேற்கக் கூடும் எனக் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமது தந்தையின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் நாளை மறுநாள்தான் முடிவடையும்; அதுவரை தம்மால் முதல்வராகப் பதவியேற்க முடியாது என மெகபூபா கூறி வருகிறார். இதனால் அம்மாநிலத்தில் ஒரு சில நாட்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஆளுநர் என்.என் வோராவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

Leave a Reply