எப்படி எல்லாம் ‘மவுஸை’ பயன்படுத்துகிறோம் என்பதை நாம் கவனத்திருக்கிறோமோ இல்லையோ தெரியாது. ஆனால் பேராசிரியர் ஜெப்ரே ஜென்கின்ஸ் நன்றாகக் கவனித்து, தீவிரமாக ஆய்வு செய்திருக்கிறார். அதன் பயனாக மவுஸ் பயன்பாடு பற்றிய சுவாரஸ்யமான கண்டுபிடிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இணையதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதன் மீது அதிருப்தி கொண்டிருக்கின்றனரா என்பதை மவுஸ் நகர்வு மூலமே தெரிந்து கொண்டுவிடலாம் என்பது பேராசிரியரின் கண்டுபிடிப்பு.
ஒருவர் மவுஸை நகர்த்துவதை கொண்டே அவர் கோபமாக இருக்கிறாரா, குழப்பமாக இருக்கிறாரா, அதிருப்தி அடைந்துள்ளாரா என அறிந்துகொள்ளலாம் என்கிறார் ஜென்கின்ஸ்.
எப்படி எனக் கேட்கிறீர்களா? மவுஸை வழக்கமான முறையில் நேராக அல்லது வளைவாக நகர்த்தாமல், தட்டுத்தடுமாறிய முறையில், மெதுவாக மவுஸை நகர்த்திக்கொண்டிருந்தால் அந்தப் பயனாளி குழப்பத்திற்கு உள்ளாகியிருப்பதாக அர்த்தம்.
பேராசிரியர் மூன்று விதமான பரிசோதனைகளை நடத்தி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். திரையில் பிழை செய்திகளைத் தோன்றச்செய்து பயனாளிகளைக் கவனிப்பது, ஒரே விதமான அலுப்பூட்டும் வேலைகளைச் செய்யும்போது கவனிப்பது உள்ளிட்ட சோதனைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதன் பிறகு, எதிர்மறையான உணர்வுகளுக்கு உள்ளாகும் போது கவனம் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படும் கவனக் கட்டுப்பாடு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தனது முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்.
பேராசிரியரின் மவுஸ் ஜோதிடத்தைக் கொண்டு இணையதள உரிமையாளர்கள் பயனாளிகளின் கருத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் உள்ளடக்கத்தை மாற்றிக்கொள்வது சாத்தியமாகும் என்கிறார் ஜென்கின்ஸ்.
ஜென்கிஸ் கருத்து பற்றி மேலும் அறிய: http://news.byu.edu/archive15-dec-angrymouse.aspx