ஒரு பெண்ணால் எப்படித் தனியாகப் பயணிக்க முடியும்?” என்பது இன்னமும் சர்வசாதாரணமாக நம் காதுகளில் விழுந்துகொண்டிருக்கும் வரிதான். ஆனால், முடியும் என்று நிரூபித்துக்காட்டுவதற்காக, இருபத்தியொரு வயது அனாஹிதா ஸ்ரீபிரசாத், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை, கிட்டத்தட்ட 4500 கிலோமீட்டரை சைக்கிளில் வெற்றிகரமாகப் பயணம் செய்து முடித்திருக்கிறார். பெண்கள் பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுவதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் அனாஹிதா.
கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய அவரது இந்த சைக்கிள் பயணம், டிசம்பர் 9-ம் தேதி முடிந்திருக்கிறது. இந்த இரண்டு மாதப் பயணத்தில் அவர் வழியில் சந்திக்கும் நபர்களிடம் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார்.
விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் இவருக்கு, கலை, கிராஃபிக்ஸ், திரைப்படங்கள் மீதிருக்கும் ஆர்வம், பனிச்சறுக்குப் போன்ற சாகச விளையாட்டுகளிலும் நீள்கிறது. ஆனால், சைக்கிள் மீதான காதல் சமீபத்தில்தான் வந்திருக்கிறது.
“நான் கடந்த மே மாதத்தில் இருந்துதான் தொடர்ச்சியான சைக்கிள் பயணங்களைத் தொடங்கினேன். அந்தப் பயணங்களின்போது, ‘நீ ஒரு பெண், இப்படி தனியாகப் பயணிப்பதில் பாதுகாப்பு இல்லையே?’ என்ற பொதுவான கேள்வியை அதிகம் எதிர்கொண்டேன். கடந்த ஆண்டு என் பனிச்சறுக்கு வகுப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அங்கே, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை சைக்கிளில் பயணம் செய்த ஃபைசல் லத்திஃப்பைச் சந்தித்தேன். அவருடைய பயண அனுபவங்களும், ஒரு பெண்ணாக நான் எதிர்கொண்ட கேள்வியும்தான் இந்தச் சவாலை என்னை ஏற்றுக்கொள்ளச் செய்தது” என்று சொல்கிறார் அனாஹிதா.
அனாஹிதாவின் இந்தப் பயணத்துக்கு அவருடைய பெற்றோரும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அவரால் நேரடியான தகவல்களைப் பெற முடியாதபோது, அவருக்குத் தேவையான இடவசதி பற்றிய தகவல்களை அவர்கள் தொடர்ந்து வழங்கியிருக்கின்றனர். இந்தப் பயணத்துக்கான செலவை கிரவுட் ஃபண்டிங் மூலம் சேகரித்திருக்கிறார் அனாஹிதா.
இந்தியாவின் சாலைகள் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதற்கான தகுதியுடன் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “பயணத்தின்போது சைக்கிளை நிறுத்துவதற்குப் பாதுகாப்பான இடம் தேடுவது, கழிவறை தேடுவது, சாப்பிடுவதற்கு நல்ல உணவகத்தைத் தேடுவது போன்ற பொதுவான பிரச்சினைகள் இருக்கவே செய்தன. ஆனால், இந்தியாவின் சாலைகள் பாதுகாப்புடன்தான் இருக்கின்றன. அதை என் பயணத்தின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த முயற்சி வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி” என்கிறார் அவர்.
“இந்தப் பயணத்தின்போது, எனக்குத் தெரியாத வேறொரு இந்தியாவைத் தெரிந்துகொண்டேன். இந்தியாவின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொண்டேன் என்றுகூடச் சொல்லலாம். நம்மால் செய்ய முடிந்த, செய்யக்கூடிய விஷயங்களை முடியாது என்று நமக்கு நாமே கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளக் கூடாது என்று இந்தப் பயணம் எனக்குக் கற்றுக்கொடுத்தது” என்று தன் பயண அனுபவத்தைச் சொல்கிறார் இவர்.
“தனியாகப் பயணம் செய்ய விரும்பும் பெண்கள் எதற்காகவும் காத்திருக்காதீர்கள். எந்தத் தயக்கமுமின்றி உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். பயன்படுத்துவதற்குத் தேவையிருக்காது என்றாலும் ‘பெப்பர் ஸ்ப்ரே, டேசர் (தாக்குதலுக்குப் பயன்படும் எலெக்ட்ரிக் கருவி)’ போன்றவற்றை உடன் எடுத்துச்செல்லுங்கள். இது ஒருவித பாதுகாப்பு உணர்வைப் பயணத்தின்போது கொடுக்கும்” என்று ஆலோசனை சொல்லும் அனாஹிதா தற்போது தன் அடுத்த பயணத்துக்காகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.
நம்மால் செய்ய முடிந்த, செய்யக்கூடிய விஷயங்களை முடியாது என்று நமக்கு நாமே கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளக் கூடாது என்று இந்தப் பயணம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.