சட்டமன்ற தேர்தல் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்து வரும் தமிழக காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து சில நாட்களுக்கு முன்பு 23 மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்த மற்றும் குற்ற வழக்குகளில் சிக்கிய 128 காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்றிரவு சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் 123 உதவி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. அசோக்குமார் பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் விரைவில் தங்கள் புதிய பொறுப்பினை ஏற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது.