ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மாற்றம் ஏன்? கருணாநிதி
நேற்று முன் தினம் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகளில் ஒருவர் திடீரென விலகியதாக அறிவித்துள்ளார். இந்த விலகல் சற்று குழப்பமாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்து வந்த நீதிபதிகளில் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த அமர்வில் ஆரம்பத்தில் நீதிபதி பினாகி சந்திர கோஷ் முதன்மை நீதிபதியாகவும், அவருக்குத் துணையாக நீதிபதி அகர்வாலும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். கடைசியாக 23-11-2015 அன்று விசாரணை நடைபெற்றபோது, மேல்முறையீட்டின் இறுதி வாதத்தைக் கேட்பதற்கான தேதி ஜனவரி 8ஆம் தேதி நிர்ணயிக்கப்படும் என்றும், அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தன.
1991-1996ஆம் ஆண்டுகளில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை 1996ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா 27-9-2014 அன்று ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியே 1 லட்சமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
அதன் பிறகு ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டின் மீது பெங்களூர் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் வழக்கு நடைபெற்றது. 11-5-2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் தவறு செய்துள்ளதை எடுத்துக்காட்டி, பிழையான கூட்டல் கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென்று கோரி கர்நாடக மாநில அரசும், கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும் உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்து அந்த வழக்குதான் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே. அகர்வால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, ஜெயலலிதாவின் மனுவுக்குப் பதில் அளித்து கர்நாடக அரசு மற்றும் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் மனு அளிக்கக் கோரி அவையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. வழக்கின் அடுத்த கட்ட வாதம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் 7-1-2016 அன்று இந்த வழக்கு விசாரணை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நீதிபதி ஆர்.கே. அகர்வால் அவர்கள் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி அமிதவராய் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்த முக்கியமான வழக்கில் நீதிபதி மாற்றம் என்பது வழக்கறிஞர்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மாற்றப்பட்டுள்ள நீதிபதி ஆர்.கே. அகர்வால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்றும், நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்த அவர், தற்போது இந்த வழக்கில் இருந்து ஒதுங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்ததால்தான், அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் மத்தியில் ஒரு உரையாடல் நிலவுகிறதாம்.
நீதிபதிகள் மாற்றம் மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்தின் சார்பில் 6.1.2016 அன்று “Elimination List” பட்டியல் ஒன்று வெளியானது. உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், நீதிபதிகளுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை 8-1-2016 அன்று நடைபெறாது என்றும் உச்ச நீதிமன்றப் பதிவுத் துறை இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாகவும் செய்தி வந்தது.
ஆனால் 7.1.2016 அன்று இந்தச் செய்தியைத் தொடர்ந்து “Supplementary List for Friday the 8th January, 2016” என்ற பட்டியலில், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கினை, விசாரணைப் பட்டியலிலே இணைத்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் என்ன காரணத்திற்காக இப்படியெல்லாம் நடைபெறுகின்றன? எதற்காக 8ஆம் தேதி விசாரணைக்காகப் போடப்பட்டிருந்த வழக்கினை நீக்கினார்கள்? பிறகு எதற்காக அதே நாளில் அந்த வழக்கினைச் சேர்த்தார்கள்?
முதலிலே இரண்டு குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கினை விசாரிப்பார்கள் என்று அறிவித்து விசாரணையையும் தொடங்கினார்கள். பிறகு தற்போது திடீரென்று ஏன் ஒரு நீதிபதியை மாற்றியிருக்கிறார்கள்? – என்பதையெல்லாம் பார்க்கும்போது சற்றுக் குழப்பமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், சட்ட நெறிமுறைகளின் தலைமைப்பீடமான உச்ச நீதிமன்றம் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவே செய்திருக்கும் என்பதிலும், சட்டத்தின் வழிமுறைகளில் எந்த முனையிலிருந்தும் எவ்விதத் தலையீட்டையும் உச்ச நீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்காது என்பதிலும், நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கவே செய்கிறது”
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.