கர்ப்பிணி பெண்களுக்காக முதல்வர் தொடங்கிய அடுத்த ‘அம்மா’ திட்டம்
கடந்த நான்கரை ஆண்டுகளில் ‘அம்மா’ என்ற பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது புதியதாக 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ என்ற திட்டத்தை கர்ப்பிணி பெண்களுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ”மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தவிர்க்க மாதுளை மணப்பாகு மற்றும் கருவேப்பிலை பொடியையும்; அடுத்த மூன்று மாதங்களின் போது தாய்க்கு ஏற்படும் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சத்து குறைபாட்டை நீக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவற்றையும்; கடைசி மூன்று மாதங்களின் போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க உளுந்து தைலத்தையும்; சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலத்தையும் பயன்படுத்தலாம்.
ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறப்புடன் முடிந்து விடுவது இல்லை. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய் சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம்; குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா 25.8.2015 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்கள்.
அதன்படி, தாய்மை அடைந்த பெண்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 கர்ப்பிணி பெண்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (நேற்று) வழங்கி துவக்கி வைத்தார்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.