பாகிஸ்தானால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வங்காள இந்துக்கள்தான். திரிபுரா கவர்னர் சர்ச்சைக்கருத்து
மும்பை குண்டு வெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் கூறி பெரும் சர்ச்சையை ஏற்கனவே ஏற்படுத்திய திரிபுரா ஆளுநர் ததாகதா ராய் தற்போது கொல்கத்தாவின் நடைபெற்ற பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி இசை நிகழ்ச்சி குறித்து மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்கில் நேற்று தொழில் துறை சார்பில் நடத்தப்பட்டவர்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து கூறிய மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவரும், திரிபுரா மாநில ஆளுநருமான ததாகதா “வங்காள ஹிந்துக்களைப் போல பாகிஸ்தான் நாட்டவரால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால், அவற்றை வங்கதேச மக்கள் மறந்துவிட்டனர் என்று வங்காள அறிஞர் ஹரபிரசாத் சாஸ்திரி கூறினார். 1950-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, அனைத்து ரயில்களும் மேக்னா ஆற்றுப்பாலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன. அனைத்து ஹிந்துக்களும் கத்தியால் குத்தப்பட்டு, ஆற்றில் வீசப்பட்டனர் என்று ததாகதா ராய் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த சர்ச்சை கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.