பொங்கல் பரிசு கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம்! ஆன் லைனில் பதிவேற்றாததால் குழப்பம்

Tamil_News_large_143267620160114032509

கடலுார்: மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகளை ஆன் லைனில் பதிவேற்றம் செய்யாததால் தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு பெற முடியாமல் பலர் ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழர்களின் பிரதான பண்டிகையான பொங்கல் திருவிழாவை அனைவரும் கொண்டாடும் பொருட்டு பொங்கல் பரிசாக, நடைமுறையில் உள்ள அரிசி ரேஷன் கார்டுகள், காவலர் ரேஷன் கார்டு மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் ரேஷன் கார்டுகளுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்தார்.

அதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள 1,129 முழுநேர ரேஷன் கடைகள் மற்றும் 276 பகுதி நேர ரேஷன் கடைகள் என 1,405 ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள 6 லட்சத்து 83 ஆயிரத்து 685 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை கடந்த 7ம் தேதி துவக்கி வைத்த கலெக்டர், இத்திட்டத்திற்காக 11 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 970 ரூபாய் அரசு வழங்கியுள்ளதாகவும், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.

அதனையொட்டி மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசை பெற்றிட ரேஷன் கடைகளுக்கு சென்றால், இந்த மாதம் பொருட்கள் வாங்கியிருந்த போதிலும் ‘ஆன் லைனில்’ உள்ள கார்டுகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் எனக் கூறி திருப்பி அனுப்பகின்றனர்.

இதனால், நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு கடையிலும் நடைமுறையில் உள்ள மொத்த ரேஷன் கார்டுகளில் 10 முதல் 20 சதவீத ரேஷன் கார்டுகள் ஆன் லைனில் பதிவேற்றப்படாமல் உள்ளது.

ஆனால், அனைத்து கார்டுக்கும் பொருட்கள் வழங்கி வருகிறோம். அதே நேரத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ‘ஆன்லைன்’ பதிவு கார்டுக்கு மட்டுமே வழங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், ஆன் லைனில் பதிவேற்றம் செய்தது குறித்த பட்டியல் எங்களுக்கு வழங்காததால் முதலில் வருபவர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு கடையிலும் 10 முதல் 20 சதவீத கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

ரேஷன் கார்டுகளை ‘ஆன் லைனில்’ பதிவு செய்வது வருவாய் துறையின் பணியாகும். இதனை, மாவட்டத்தில் முறையாக செய்யப்படாததால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் அனைத்து தகுதி இருந்தும், தமிழக முதல்வர் அறிவித்துள்ள பொங்கல் சிறப்பு பரிசு பொருளை பெற முடியாமல் பெரும்பாலான ஏழை மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

Leave a Reply