பொங்கல் பண்டிகையின்போது மதுவிற்பனை எவ்வளவு?
ஒவ்வொரு பண்டிகையின்போது டாஸ்மாக் மதுவிற்பனை இலக்கு வைத்து அரசு விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் கடந்த பொங்கல் திருநாளில் நான்கு நாட்கள் ஏற்பட்ட விடுமுறை தினத்தில் சுமார் ரூ.365 கோடி அளவுக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் காரணமாக டாஸ்மாக் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த பொங்கலின்போது டாஸ்மாக் மது விற்பனைக்காக இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. எனினும், கடந்த ஆண்டைவிட அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்று மாவட்ட, மண்டல மேலாளர்கள் டாஸ்மாக் ஊழியர்களை அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த ஆண்டு போகிப் பண்டிகையான ஜனவரி 14-ம் தேதி ரூ.110 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகின. பொங்கல் நாளான 15-ம் தேதி ரூ.140 கோடிக்கும், காணும் பொங்கல் நாளான 17-ம் தேதி ரூ.115 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது.
இந்த 3 தினங்களில் சுமார் ரூ.365 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.