எங்கள் திட்டத்தை காப்பியடித்துவிட்டார் ஜெயலலிதா. ராமதாஸ் குற்றச்சாட்டு

எங்கள் திட்டத்தை காப்பியடித்துவிட்டார் ஜெயலலிதா. ராமதாஸ் குற்றச்சாட்டு

ramdossமுதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்த ‘அம்மா அழைப்பு மையம் திட்டம்’ பாமகவின் வரைவுத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்றும்,  அதை தமிழக அரசு காப்பியடித்துள்ளது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தங்கள் குறைகளைக் களைய அம்மா அழைப்பு மையத்தை இன்று பிற்பகலில் ஜெயலலிதா தொடங்கி வைக்கவுள்ளார். குறைகளை கூற விரும்புவோம் 1100 என்ற எண்ணில் இந்த மையத்தை தொடர்பு கொண்டு பேசினால் அவை உடனுக்குடன் தீர்க்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பா.ம.க. வெளியிட்ட வரைவுத் தேர்தல் அறிக்கையில் இதே திட்டத்தை அறிவித்திருந்தோம்.

தேர்தல் அறிக்கையின் 21-ஆவது பக்கத்தில் ‘ மக்களுக்கு அதிகாரம் அளிக்க நிர்வாக முறையில் மாற்றம் கொண்டு வருவோம்’ என்ற தலைப்பில் 6-ஆவது வாக்குறுதியாக ‘‘மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க முதலமைச்சர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தனி மையங்கள் தொடங்கப்படும். தொலைபேசி வழியாக குறைகளை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் சேவை வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தான் அம்மா அழைப்பு மையம் என்ற பெயரில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்திருக்கிறார். இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி.

மக்களின் குறைகளை அறிய அழைப்பு மையம் தொடங்குவது நல்ல திட்டம் என்றாலும், அதிமுக அரசால் அதை முறையாக செயல்படுத்த முடியாது. கடந்த 56 மாதங்களாக மக்களின் குறைகளை தீர்க்க முடியாத இந்த அரசால் நிச்சயமாக மக்களின் குறைகளை களைய முடியாது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த எண் 110. அத்துடன் ஒரு ஜீரோ சேர்த்து அழைப்பு மைய எண்ணை உருவாக்கியிருக்கிறார்கள். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 90% திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.</p>

அதேபோல்தான் 110 உடன் 0 சேர்க்கப்பட்ட 1100 அழைப்பு மையத்திற்கு தெரிவிக்கப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது. பா.ம.க. ஆட்சியில் அழைப்பு மையம் திட்டத்திற்கு தலைமைச்செயலாளர் நிலையிலான அதிகாரி ஒருவரை பொறுப்பாளராக நியமித்து, பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து குறைகளும் உடனடியாக களையப்படுவதை உறுதி செய்வோம்.

மத்திய அரசின் மத்திய கண்காணிப்பு ஆணையர் மத்திய அரசிலுள்ள அனைத்து துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் அனைத்து ஊழல் புகார்களையும் 6 மாதங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இது பாராட்டத்தக்க நடவடிக்கை. இதை பாமக வரவேற்கிறது.

மத்திய கண்காணிப்பு ஆணையரின் அறிவுறுத்தல் ஆளுனர்களுக்கு பொருந்தாது என்ற போதிலும், அந்த அறிவுறுத்தலின் நோக்கம் ஆளுனருக்கும் பொருந்தும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்திலிருந்து மாநில ஆளுனர்கள் விலகி இருக்க முடியாது. அதன்படி ஊழல் புகார்கள் மீது ஆளுனர்களும் 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

ஆனால், தமிழக அரசு மீது 18 ஊழல் குற்றச்சாற்றுகள் அடங்கிய பட்டியலை ஆதாரங்களுடன் ஆளுனர் ரோசய்யாவிடம் பா.ம.க. தாக்கல் செய்து ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனால், இதுவரை அந்த ஊழல் புகார் பட்டியலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்குப் பிறகாவது தமிழக அரசு மீது பா.ம.க. முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க ஆளுனர் ரோசய்யா ஆணையிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply