மாணவர்கள் காப்பி அடிக்க உதவும் பெற்றோர்களுக்கு சிறைதண்டனை. பீகார் அரசு அதிரடி அறிவிப்பு

மாணவர்கள் காப்பி அடிக்க உதவும் பெற்றோர்களுக்கு சிறைதண்டனை. பீகார் அரசு அதிரடி அறிவிப்பு
exam
பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடிக்கும்  மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும்  பெற்றோர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் பீகார் அரசு எச்சரித்து உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றபோது, தேர்வு அறையில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த  மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, ‘காப்பி‘ அடிப்பதற்கு வசதியாக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கினர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவர்கள் காப்பியடிக்க பெற்றோர்களே உதவி செய்வதும் இதற்கு பள்ளி நிர்வாகமும் ஒத்துழைப்பு கொடுத்த இந்த விவகாரம் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார் பள்ளி கல்வித்துறை, 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு உதவி செய்யும் பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், “காப்பி அடிக்கும் மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று பீகார் பள்ளி கல்வித்துறை தலைவர் லால் கேஷ்வார் பிரசாத் சிங் தெரிவித்து உள்ளார். மேலும் தேர்வு நடைபெறும் பள்ளி அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்களை வைக்கவும், தொடர்ந்து உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

Leave a Reply