இந்து சிறுவனை உயிரோடு எரித்த மர்ம கும்பல். புனேவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
புனே நகரில் இந்து சிறுவன் ஒருவன் மர்ம கும்பல் ஒன்றால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அந்த சிறுவன் தற்போது உயிருக்கு போராடியவாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
புனே நகரை சேர்ந்த 17வயது சிறுவன் சாவன். இந்த சிறுவன் வீட்டில் கோபித்து கொண்டு வேலை தேடி சென்றபோது ஒரு இடத்தில் சிறுநீர் கழித்ததாகவும் அப்போது அவனை நெருங்கிய ஒரு மர்ம கும்பல் சிறுவனின் பெயரையும் மதத்தையும் கேட்டு விசாரித்ததாகவும், சிறுவன் பெயரையும் தன்னுடைய மதம் இந்து என்றும் கூறியவுடன் அவன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து புனே நகர துணை கமிஷனர் துஷார் தோஷி செய்தியாளர்களிடம் கூறியப்போது “இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம். மிகவும் கொடூரமான சம்பவம் இது. ஆனால் இதற்கு மத விவகாரம் காரணமாக இருக்காது என்று கருதுகிறேன். முதலில் சாவனை அடித்துள்ளனர். பின்னர் அவரை பெட்ரோல் குடிக்க வைத்து, தீ வைத்துள்ளதாக தெரிகிறது’ என்று கூறினார்.
ஆனால் ‘பஞ்சாரா கிராந்தி தல் ‘ என்ற அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் ரதோட் என்பவர் இந்த சம்பவம் குறித்து கூறியபோது, ” இந்த சம்பவம் குறித்து கேள்விட்டு எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுடன் நானும் சாவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு, சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. அங்கிருந்த போலீசாரிடம் சிறுவனின் வாக்குமூலத்தை பதியுமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். எனவே நான் எனது செல்போனில் எங்கள் அமைப்பு மற்றும் சாவனின் தந்தை முன்னிலையில் வாக்குமூலத்தை பதிவு செய்தேன். புனே போலீசார் இது மத ரீதியான பிரச்னையை ஏற்படுத்து விடும் என்று உண்மையை சொல்ல தயங்குகின்றனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்
இந்த சம்பவம் புனே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.