சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம். அன்புமணி ராமதாஸ் உறுதி

சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம். அன்புமணி ராமதாஸ் உறுதி
anbumani
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் பாமக மட்டும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு கூட்டணி குறித்து கவலைப்படாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில்  பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் நடைபெற்ற ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், ‘நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்’ என்ற தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். பின்னர் அவர் அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசியதாவது:

‘பாரம்பரிய சிறப்பு கொண்ட, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னையை திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக நாசம் செய்துவிட்டன. சென்னையை நீடித்த, வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கான பிரச்சார இயக்கம் இது. நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்? என நம் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் அரசியல் செய்யவோ, ஓட்டு கேட்கவோ இந்தப் பிரச்சார இயக்கத்தை தொடங்கவில்லை.

அடுத்த 6 மாதங்கள் இந்தப் பிரச்சாரம் நடக்கும். சென்னை பெருநகர் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்டு ஒரு ஆவணத்தை தயாரித்து அரசிடம் வழங்க இருக்கிறோம். சென்னையை சிங்கப்பூராக மாற்ற முடியும். அதற்கான செயல்திட்டம் எங்களிடம் இருக்கிறது.

கடந்த 2010-ல் அண்ணா பல்கலைக்கழகம் ரூ.2.17 கோடி செலவில் ஓர் ஆய்வு நடத்தி சென்னையை மேம்படுத்துவதற்கான செயல்திட்ட அறிக்கையை வழங்கியது. அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் இப்போது கடும் வெள்ள சேதத்தை நாம் சந்திக்க நேரிட்டது.

மழை நீரை கடலில் விட்டுவிட்டு மறுபடி கடலில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துகின்றனர். இது திமுக, அதிமுக கட்சிகள் கொள்ளையடிப்பதற்கான திட்டம்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.
 

Leave a Reply