ஆஸ்துமாவுக்கு என்ன பரிசோதனை?

asthma_2707595f

பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் இரண்டு கோடி பேர் ஆஸ்துமாவால் அவதிப்படு கின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.

காரணங்கள்

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, வாகனப்புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள், பூஞ்சை, செல்லப்பிராணிகளின் கழிவு போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்பநிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாகச் சிகிச்சை எடுக்காதபட்சத்தில், இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தை களுக்கு ஆஸ்துமா வருகிறது.

இவை தவிர, கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.

ஏற்படும் விதம்

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச்சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கிவிடுகிறது.

இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை, இது இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. அதிலும் முக்கியமாக, மூச்சை வெளிவிடுவதுதான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

என்ன பரிசோதனைகள்?

மூச்சுத் திணறல் உள்ள ஒருவருக்கு, மூச்சுத் திறனை அறிந்து கொள்ள உதவும் பரிசோதனைகள் (Pulmonary Function Tests) மூலம் ஆஸ்துமா உள்ளதா அல்லது வேறு காரணமா என்று தெரிந்து சிகிச்சை அளிப்பது நடைமுறை:

1. பீக் ஃபுளோ மீட்டர் (Peak Flow Meter) பரிசோதனை:

# நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்வதைப்போல, ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத் திறனை அறிந்துகொள்ள உதவும் ஓர் எளிய கருவி பீக் ஃபுளோ மீட்டர்.

# ஒருவருக்கு ஆஸ்துமா வந்துள்ளது என முதல்முறையாக அறிவியல் ரீதியாகத் தெரிந்து கொள்ளவும் அவருக்கு மூச்சுத்திறன் குறைந்துள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.

# சிகிச்சைக்குப் பிறகு மூச்சுத் திறன் அதிகரித்துள்ளதா என்பதையும் தெரிவிக்கிறது.

# மூச்சுத்திறன் அளவு குறைந்தால் மருந்தின் அளவை அதிகப்படுத்தவும், சரியாக இருந்தால் மருந்தின் அளவை குறைப்பதற்கும் இது உதவுகிறது.

# ஆஸ்துமா நோய் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

# காய்ச்சலைக் கண்டறிய உதவும் தெர்மாமீட்டரைப்போல, ஆஸ்துமாவைக் கண்டறியவும், கட்டுப்பாட்டை அறியவும் மிகவும் எளிமையான, தெளிவான, அதிகச் செலவில்லாத பரிசோதனை இது.

# இந்தக் கருவியை வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம்.

2. ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) பரிசோதனை:

# மூச்சுத் திறனைப் பரிசோதிக்க உதவும் மற்றொரு பரிசோதனை இது.

# முதலில் காற்றை ‘தம்’ கட்டி உள்ளே இழுக்க வேண்டும். பிறகு இதற்கென உள்ள கருவியில் வேகமாகக் காற்றை வெளியேற்ற வேண்டும்.

# இதைக் கொண்டு நுரையீரலில் உள்ள காற்று, வெளியேறிய காற்றின் அளவு, சுவாசிக்கப் பயன்படும் காற்றின் அளவு போன்றவற்றை ஒரு கிராஃப் படமாக வரைந்து காண்பிக்கும்.

# இதன் மூலம் மூச்சுக் குழலில் தடை ஏற்பட்டுள்ளதா, நுரையீரல் விரிவதில் தடை உள்ளதா என்பதைப் பிரித்து அறியலாம்.

# ஆஸ்துமா மற்றும் சுவாசத் தடை நோய்கள் இருந்தால், அவை மருந்து களால் கட்டுப்படுமா, இல்லையா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

3. பல்ஸ் ஆக்சி மீட்டர் (Pulse Oximeter) பரிசோதனை:

# சிறு குழந்தைகளுக்கு மூச்சுத்திறனை அறிய இந்தச் சோதனைகளைச் செய்வது கடினம். அவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் பரிசோதனை செய்தால், ஆஸ்துமா காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்திருக்கிறதா எனத் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

4. ரத்தப் பரிசோதனைகள்:

# சாதாரண ரத்தப் பரிசோதனைகளில் அவ்வளவாக மாற்றம் இருக்காது.

# இயோசினோபில் அணுக்கள் அதிகமாக இருக்கும்.

# இயோசினோபில் அணுக்களின் இயல்பு அளவு 1 – 4 %.

5. மார்பு எக்ஸ் – ரே (Chest X – ray) பரிசோதனை:

# ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரல் அதிகமாக விரிந்த நிலையில் இருக்கும்.

# மூச்சுக்குழலின் ரத்தக் குழாய்கள் விரிந்து கம்பீரமாகத் தெரியும்.

# சில இதயக் கோளாறுகள் ஆஸ்துமாவைப் போலவே குணங்களைக் காட்டும். அப்போது அவற்றை ஆஸ்துமாவிலிருந்து பிரித்துப் பார்க்க இது உதவும்.

6. மார்பு சி.டி. ஸ்கேன் (CT scan) பரிசோதனை:

# குழந்தைகளுக்கும், நாட்பட்ட தீவிர ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்தப் பரிசோதனை தேவைப்படுகிறது.

# ஆஸ்பெர்ஜிலஸ் எனும் பூஞ்சை தொற்று, தீவிர ஆஸ்துமாவின் பின்விளைவான பிராங்கியோலைட்டிஸ் எனும் நோய் உள்ளவர்களுக்கு நோயைக் கணிக்க இது மிகவும் உதவுகிறது.

# நுரையீரல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங் களைத் துல்லியமாகத் தெரிவிக்கிறது.

7. ஒவ்வாமைப் பரிசோதனைகள்:

# தோலின் உள்ளே ஒவ்வாமை மருந்தைச் செலுத்தி எதற்கு ஒவ்வாமை எனத் தெரிந்துகொள்ள `தோல் குத்தல் பரிசோதனை’(Modified Prick Test) செய்யப்படும்.

# மருந்துகளுக்கு ஒவ்வாமை உள்ளதா எனத் தெரிந்துகொள்ள `பேட்ச் பரிசோதனை’ (Patch Test) தேவைப்படும்.

# RAST பரிசோதனை: பாதிக்கப் பட்டவருக்கு ஒவ்வாமை உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இமுனோகுளோபுலின் இ (IgE) அளவு பரிசோதிக்கப்படும். இது மிகவும் அதிக அளவில் இருந்தால், ஒவ்வாமை உள்ளது என்பது நிச்சயம். ஆனால், அது ஆஸ்துமாவாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

# பிறந்த குழந்தைக்கு ஒவ்வாமை வருமா, வராதா எனத் தெரிந்துகொள்ளத் தொப்புள்கொடி இமுனோகுளாபுலின் இ (Cord IgE) பரிசோதனையைச் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply