டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அன்புமணி ஆஜர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கும், 2ஜி வழக்கும் அதிமுக மற்றும் திமுகவை பயமுறுத்தி வரும் நிலையில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸையும் ஒரு வழக்கு விரட்டி வருகிறது. இதனால் பாமக தலைமை அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் சிபிஐ பதிவு செய்த வழக்கின் விசாரணைக்காக, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று அன்புமணி ஆஜரானார்.
டெல்லி சிபிஐ நீதிமன்றம் அன்புமணி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்ததை அடுத்து இன்று அவர் நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள இன்டெக்ஸ் கல்லூரி மீது கூடுதலாக 2 பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இன்டெக்ஸ் மருத்துவ கல்லூரி தரப்பு வாதத்தை பிப்ரவரி 8ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.