நிதிமுறைகேடு வழக்கில் இலங்கை அதிபர் ராஜபக்சே அதிரடி கைது.
நிதி முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றில் சிக்கிய முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனை இலங்கை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததில் இருந்து அவரும் அவரது குடும்பத்தினர்களும் ஏராளமான சட்ட சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே என்பவர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையில் பணியாற்றி வரும் இவருக்கும், இவரது குடும்பத்தின் தொலைக்காட்சி சேனலான சிஎஸ்என் நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், யோஷித ராஜபக்சேவிடம் நேற்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். நீண்டநேர விசாரணைக்குப் பின்னர் அவரை கைது செய்தனர். அவருடன் ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ரோகன் வெலிவிதா மற்றும் 2 பேரையும் கைது செய்திருப்தபாக தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பண மோசடி சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ராஜபக்சேவின் இரண்டாவது மகனின் கைதை அடுத்து இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.