அல்சருக்கு என்ன பரிசோதனை?

download (5)

அவசரமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற உடல்நலப் பிரச்சினை `அல்சர்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிற இரைப்பைப் புண். விரைவு உணவு, ஆயத்த உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, செயற்கை வண்ண உணவு என்று மேற்கத்திய உணவுக் கலாசாரம் நம்மிடம் புகுந்துவிட்ட பிறகு காய்ச்சல், தலைவலியைப்போல் அல்சர் தொல்லையும் இயல்பாகிவிட்டது.

அல்சர் என்பது என்ன?

தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’(Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’(Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’(Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.

இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகிற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் சுவற்றில் உள்ள மியூக்கஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதைக் ‘இரைப்பை அழற்சி’ (Gastritis) என்கிறோம். இதை காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பை புண்ணாக மாறிவிடும்.

காரணங்கள்

காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவை அதிகமாகச் சாப்பிடுவது; மது அருந்துதல், புகைபிடித்தல், கோலா, காபி மற்றும் தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது; ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது; உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணை வரவேற்கும்.

மேலும் சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது. மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன.

வேளை தவறிச் சாப்பிட்டால்…?

தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குக் காரணம், நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே, ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால், இந்த அமிலம் இரைப்பையின் மியூக்கஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குமட்டலும் வாந்தியும் வரும்.

குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரத்திலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம், புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது. பொதுவாகச் சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர்.

பாதிப்புகள் என்ன?

இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சற்று அதிகம். அப்போது புண்ணில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி வரலாம். இரைப்பையில் இல்லாமல், முன்சிறுகுடலில் புண் இருந்தால், குடல் அடைப்பு ஏற்படுவதுண்டு. சமயங்களில் குடலில் துளை விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

என்ன பரிசோதனை?

1. இரைப்பை எண்டோஸ்கோப்பி (Gastro endoscopy) பரிசோதனை:

# தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

# முக்கியமாக உணவுக்குழாய் அமில அரிப்பு, உணவுக்குழாய்ப் புற்றுநோய், ரத்தக்கசிவு, இரைப்பைப் புண், இரைப்பை மேலேற்றம், இரைப்பைப் புற்றுநோய், முன்சிறுகுடல் புண், முன் சிறுகுடல் அடைப்பு போன்ற பல பிரச்சினைகளை இதில் உறுதி செய்யமுடியும்.

எண்டோஸ்கோப்பி பரிசோதனைக்கு எப்படிச் செல்ல வேண்டும்?

# இதை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். எனவே, இதைச் செய்வதற்கு முன்பு ஆறு முதல் பன்னிரண்டு மணி நேரம்வரை எந்த உணவையும் சாப்பிடக்கூடாது.

# வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப்படி பரிசோதனைக்குப் பின்பு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

# இன்சுலின் போட்டுக்கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அளவை மருத்துவர் ஆலோசனைப்படி குறைத்துக்கொள்ளலாம் அல்லது அந்த ஒரு வேளை மட்டும் நிறுத்திக் கொள்ளலாம்.

2. திசு ஆய்வுப் பரிசோதனை (Biopsy):

# இரைப்பையில் உள்ளது அல்சரா, புற்றுநோயா என்பதைத் தெளிவுபடுத்த இந்தப் பரிசோதனை உதவுகிறது.

# எண்டோஸ்கோப்பி பரிசோதனையின் போது, இரைப்பை அல்சரிலிருந்து சிறிதளவு திசுவை வெட்டி எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது.

# அல்சர் பாதிப்பு, புற்றுநோயின் பாதிப்பு மற்றும் அதன் வகை எனப் பல விவரங்கள் இதில் தெரியவரும்.

# இதே பரிசோதனையில் ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ பாக்டீரியா இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

# இதன் முடிவு தெரிய ஒரு வாரம் ஆகும்.

3. ரேபிட் யூரியேஸ் பரிசோதனை (Rapid Urease Test):

# அல்சருக்கு ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ பாக்டீரியா காரணமா என்பதை உடனடியாக அறிய உதவும் பரிசோதனை இது.

# இரைப்பையில் இந்தப் பாக்டீரியாக்கள், யூரியேஸ் எனும் என்சைமை வெளிவிடும்.

# எண்டோஸ்கோப்பி பரிசோதனையின்போது இரைப்பையில் உள்ள அமிலச் சுரப்பை எடுத்து, இதற்கென்றே உள்ள ஒரு பட்டையில் விட்டுப் பரிசோதிக்கிறார்கள்.

# அமிலச் சுரப்பில் யூரியேஸ் என்சைம் இருந்தால், இது ‘பாசிட்டிவ்’ என்றும், இல்லையென்றால் ‘நெகட்டிவ்’ என்றும் முடிவு உடனே தெரிந்துவிடும்.

# இது செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்து எந்தவித ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது என்பது முக்கியம்.

4. வயிற்று எக்ஸ்-ரே (X-Ray Abdomen Erect):

# அல்சர் காரணமாக இரைப்பையிலோ, குடலிலோ துளை விழுந்திருந்தால், இந்தப் பரிசோதனை செய்யப்படும்.

# நோயாளியை நிற்கவைத்து வயிற்றை எக்ஸ்-ரே எடுப்பார்கள்.

5. வயிற்று அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை (Ultra Sound Scan):

# அல்சர் இல்லாமல் வயிற்றில் உள்ள வேறு உறுப்புகளில் பிரச்சினை இருக்கும்போது சில அறிகுறிகள் அல்சர் மாதிரித் தோன்றும். அப்போது அந்த உறுப்புகளின் பிரச்சினைகளை அறிய இது செய்யப்படுகிறது.

# உதாரணத்துக்குக் கல்லீரல் அழற்சி, பித்தப்பை அழற்சி , பித்தப்பையில் கல், கணைய அழற்சி போன்றவற்றின் காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்பட்டால், இந்தப் பரிசோதனை தெரிவித்துவிடும்.

6. பேரியம் எக்ஸ்-ரே படங்கள் (Barium Mea# Series):

# அல்சரின் அளவை அறியவும், குடல் அடைப்பு எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதை அறியவும் முன்பு ’பேரியம்’எனும் மாவை நோயாளிக்குக் கொடுத்துக் குடிக்கவைத்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் எக்ஸ்-ரே படங்களை எடுப்பது நடைமுறையில் இருந்தது.

# இரைப்பை எண்டோஸ்கோப்பி வந்த பிறகு, மருத்துவர்கள் இதை அதிகம் பயன்படுத்துவது இல்லை.

கடைசியாக ஒன்று: இரைப்பையில் புற்றுநோய் இருந்தால், அது உடலில் வேறு எங்காவது பரவியிருக்கிறதா என்பதை அறியச் சி.டி. ஸ்கேன் பரிசோதனை தேவைப்படும்.

 

Leave a Reply