காங்கேயம் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா தரிசனம் செய்தனர்.
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இந்த கோவில் தைப்பூசத் தேரோட்டம் கடந்த 24–ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. மலையை சுற்றி வந்த தேர் 3–வது நாள் நிலையை அடைந்தது. பின்னர் மலையில் இருந்து கீழ் இறங்கிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மலை அடிவாரத்தில் உள்ள நந்தவனத் தோட்டத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
விழாவின் தொடர்ச்சியாக நேற்று மதியம் 12 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா தரிசனம் செய்தனர்.
மஞ்சள் நீராட்டு
வருகிற 2–ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 3 மணிக்கு சாமிக்கு மஞ்சள் நீராட்டும் அதைத்தொடர்ந்து சாமி, திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
திருவிழாவையொட்டி காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கிராம மக்கள் குழுவாக சேர்ந்து விரதம் இருந்து, காவடி எடுத்துவந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.