மியான்மரில் ஆன் சாங் சூகி தலைமையிலான ஆட்சிக்கு ராணுவம் ஒப்புதல்
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இன்று ஆன் சாங் சூகி தலைமையிலான புதிய அரசின் பாராளுமன்ற அமர்வு கூட்டம் தொடங்கியது.
ராணுவத்தின் சார்பில் போட்டியிட்ட மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் அதிகாரத்தின் பெரும்பகுதியை ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங், அதிபர் தெய்ன்சீன் ஆகியோரிடம்தான் இதுவரை இருந்து வந்தது. இதனையடுத்து சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில் ராணுவ தளபதி மற்றும் அதிபர் தெய்ன்சீன் ஆகியோர்களை ஆங் சான் சூகி இருமுறை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதன் பலனாக தற்போது அங்கு ஆட்சியை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்க ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து மியான்மரில் ஆன் சாங் சூகி தலைமையிலான புதிய அரசின் பாராளுமன்ற அமர்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஆன் சாங் சூகி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய பாராளுமன்றத்திற்கு புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டிய பணி இன்று அல்லது நாளை நடைபெறும் என தெரிகிறது.