அது சேரச் சேர, சருமத்தின் ஈரப்பதம் குறைந்து, சொரசொரப்பாக, பளபளப்பின்றி ஆரோக்கியமற்ற தோற்றம் தெரியும். எல்லோருக்கும் தனது சருமம் இளமையாக, வழவழப்பாக, கண்ணாடி மாதிரி பளபளப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு முதலில் இறந்த செல்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கு உதவுவதுதான் ஃபேஷியல். இளம் வயதில் சருமத்தின் செல் வளர்ச்சி சீராக இருக்கும். எனவேதான் மிகவும் இளம் வயதில் ஃபேஷியல் தேவையில்லை என்கிறோம்.
அதுவே 25 வயதுக்குப் பிறகு இறந்த செல்கள் வெளித்தள்ளப்படுவது வேகமாகவும் நடக்கும். புது செல்களின் வளர்ச்சி குறையும். இறந்த செல்கள் சருமத்தின் உள்ளேயே சேர்வதும் அதிகமாகும். 21 நாட்களுக்கு ஒருமுறை ஃபேஷியல் செய்வதன் மூலம் இறந்த செல்கள் சேர்வதை சரி செய்து, சருமத்துக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கலாம். ஃபேஷியலில் சருமம் ஆழம் வரை சுத்தப்படுத்தப்படுகிறது. இறந்த செல்கள் ஸ்க்ரப் செய்து அகற்றப்படுகின்றன.
பிறகு மசாஜ் செய்து, முகத் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றன. கடைசியாக போடப்படுகிற மாஸ்க், சருமத் தசைகளை டைட்டாக்கி, முழுமையான அழகைத் தருகிறது. 20 வயதுக்குப் பிறகு ஃபேஷியலை ஆரம்பிக்கலாம். உங்கள் சருமத்தின் தன்மை எப்படிப்பட்டது… அதற்கு எந்த மாதிரி பொருட்கள் ஏற்றுக் கொள்ளும் என்கிற தகவல்களை அழகுக் கலை நிபுணருடன் ஆலோசனை செய்த பிறகே ஃபேஷியல் செய்ய வேண்டும். பொதுவாக ஃபேஷியல் என்பது செய்த உடனேயே அதன் பலனைக் காட்டாது.
அடுத்தடுத்த நாட்களில்தான் அதன் பலன் தெரியும். அவசரமாக ஒரு முக்கியமான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற நிலையில் ஃபேஷியலின் மூலம் இன்ஸ்டன்ட் பலனை எதிர்பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஃப்ரூட் மாஸ்க் ஃபேஷியலை செய்து கொள்ளலாம். சிலவகை ஃபேஷியல்களை எல்லா வயதினருக்கும் எல்லா வகையான சருமங்களுக்கும் செய்ய முடியாது.
உதாரணத்துக்கு சரும நிறத்தை மேம்படுத்தும் ஸ்கின் லைட்டனிங் ஃபேஷியல், ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியல் போன்றவற்றை எல்லோருக்கும் செய்ய முடியாது. ஆனால், இந்த ஃப்ரூட் மாஸ்க் ஃபேஷியலை 22 வயது முதல் 65 பிளஸ் வயது வரை யாரும் செய்து கொள்ளலாம். இதில் சரும நிறம் மேம்படும். சருமத்துக்கு நல்ல ஈரப்பதம் கிடைக்கும். உடனடி பளபளப்பும் கிடைக்கும்.
ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு குணம் உண்டு என்பதால் அவரவர் சருமத்தின் தன்மை மற்றும் தேவை அறிந்து அதற்கேற்ற பழத்தில் ஃபேஷியல் செய்யப்பட்டு, மாஸ்க் தயாரிக்கப்படும். உதாரணத்துக்கு அதிக எண்ணெய் வழிகிற சருமத்துக்கு வைட்டமின் ‘சி’ சத்தை கொடுக்கும் வகையில் ஆரஞ்சுப் பழமும், ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியலில் வாழைப்பழமும் பயன்படுத்தப்படும்.