ஜிகா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘ஜிகா’ வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க சமீபத்தில் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகளை அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்ட நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
பசிபிக் நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக பரவி வந்த ‘ஜிகா’ வைரஸ் கடந்த ஆண்டு அமெரிக்காஅ, பிரேசில், கொலம்பியா மற்றும், ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. அமெரிக்கா உள்பட 13 நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சுமார் 3,500 குழந்தைகள் பலவிதமான குறைகளுடன் பிறந்திருப்பதால்இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் அவசியம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ”உலகிலேயே முதலாவதாக ஜிகா வைரஸ்-க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த நிறுவனம் நாமாக இருக்கலாம். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே அந்த மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் மாதிரியை இறக்குமதி செய்து இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். இந்த மருந்தை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய அரசின் ஆதரவை கேட்டுள்ளோம். இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலும் உதவி செய்ய முன்வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், ”பாரத் பயோடெக் ‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வு செய்ய உள்ளோம். இது ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புக்கு ஒரு நல்ல உதாரணம்” என்றார். இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.