ரெயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 2030 பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
செகந்திராபாத்தை தலைமை இடமாக கொண்ட தெற்கு மத்திய ரெயில்வே மண்டலம், ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில் பெண் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மொத்தம் 2030 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆர்.பி.எப். பணிக்கு 1827 இடங்களும், ஆர்.பி.எஸ்.எப். பணிக்கு 203 பணி இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.எப். பணியிடங்களில் 904 பேர் தெற்கு ரயில்வே உள்பட 9 மண்டலங்களில் உள்ள பெண்கள் பட்டாலியனில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆர்.பி.எப். படையில் சேர்க்கப்படுவார்கள்.
கல்வித் தகுதி:
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 1-7-2016 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-7-1991 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
உடல்தகுதி:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 152 செ.மீ. உயரம் இருந்தால் போதுமானது.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை மற்றும் என்.சி.சி. – விளையாட்டு சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் படி தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநில பகுதிகளை சேர்ந்தவர்கள் இணையதளம் மூலமாகவோ, தபால் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். தேவையான இடத்தில் சான்றிதழ், கையப்பம் மற்றும் புகைப்படம் பதிவேற்ற வேண்டும்.
முக்கிய தேதி:
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 1-3-2016
இது பற்றிய விரிவான விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும்www.scr.indianrailways.gov.in மற்றும் www.rpfonlinereg.in என்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.