காயமே இது பொய்யடா என்று ஒரு சித்தர் பாட, போகர் சித்தர் காயமே இது மெய்யடா என்கிறார்! சித்தர்களுக்குளேயே இப்படி வித்தியாசமான விளக்கம் இருக்கிறது. மனித அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் இந்த உடம்புதான் மேடை. காய சாதனையை அகப்பேய் சித்தர் தேக ஞானம் என்கிறார்.
தேகத்தை (காயத்தை) நீண்டநாள் வாழும் படி (கல்பம்) செய்வது சித்த மார்கத்தில் முதல் படி. ஆதற்கு பல வழிகள் உண்டு. மருந்து, மூலிகைகள், ரசவாதம் போன்ற வெளி பொருட்களாலும், யோகம், தவம், வாசி போன்ற உள் பயிர்ச்சியினாலும் தேகத்தை காய கல்பமாக மாற்றலாம். இப்படி காய கல்பமாக மாறிய உடம்பை வைத்து தான் “நிர்விகல்பம்” என்கிற சமாதிநிலையை தபஸ்விகள் அடைந்து பரம்பொருளில் தங்களை இணைத்து கொள்கின்றனர்!
சில சித்தர்கள் உடம்பை எப்படி விளித்தனர் என்று பார்ப்போம்!
பாம்பாட்டி சித்தர் – உடம்பு ஓர் நீர்க்குமிழி.
திருமூலர் – நெருப்பில் இட்ட கற்பூரம். உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டுள்ளான்.
சிவவாக்கியர் – ஐந்து உணர்வுகளால் கட்டப்பட்ட தோணி. முட்டை ஓடு போன்றது. குடத்தில் நீரை மொள்ளும்போது குடம் நீரால் நிரம்பியிருப்பதுபோல சடலமாகிய இவ்வுடம்பு சிவத்தை மொண்டு அமைந்து இருக்கிறது!
கொங்கணர் – ஊத்தை சடலமென்று எண்ணாதே, இதை உப்பிட்ட பாண்டமென எண்ணாதே! ஊமை எழுத்தே உடலாச்சு!
வால்மீகர் – உடம்பு சக்தி – உயிர் சிவம்
கபீர் – நீ இருக்கும் இடமே உனது நுழைவாசல்
பத்திரகிரியார் – நவசூத்திர வீட்டை நான் என்று அலையாமல் சிவ சூத்திரத்தை தெரிந்தரிவது எக்காலம்?
இப்படி பலவிதங்களில் விவரிக்கப்பட்ட உடம்பை நாம் சரியாக பாது காக்கிறோமா? இல்லை ! கண்டதை சாப்பிட்டு, தொண்டை வரை தொடரும் ருசிக்காக, வயிறுக்கும், உடலுக்கும் பொருந்துமா என்று போலும் யோசிக்காமல் அனைத்தையும் விழுங்குகிறோம்! உண்ணும் அன்னத்தில் சாத்வீகம் எது, அல்லாதது எது என்று பிரித்தறிய வேண்டும். காய் கறிகள், பருப்பு வகைகள், இவைகளை தேர்ந்தெடுக்கும் போது கூட நம் உடலுக்கு எது நல்லது என்று பெரியவர்கள் சொல்லி போனதை சற்று நினைவில் கொள்ள வேண்டும். தெரிந்த ஒரு சில வகைகளை உணர்த்துகிறேன்!
பகல் வேளையில் மட்டும் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகளில் இஞ்சி, தயிர், கீரை, நெல்லிக்காய் வகைகள் முக்கியமானது!
பருப்பு வகைகள் எல்ல காலத்திற்கும் ஏதுவானது! ஆன்மீக பாதையில் செல்பவர்களுக்கு பாசி பருப்பும், சிறு பயறும் மிகுந்த உதவி செய்யும். இவை இரண்டும் உப்பில்லாமல் உட்கொள்ள உடன் பலனளிக்கும்.
கத்திரிக்காய் எதிர் அலைகளை கொண்டது. தவிர்ப்பது நல்லது.
நாம் உட்கொள்ளும் உணவு இரண்டு மணி நேரம் தான் நம் வயிற்றில் தங்கலாம்! ஆதற்கு மீறி தாங்கும் உணவு உடலுக்குள் விஷமாக மாறும். இந்த விஷம் உடலால் உறிஞ்சப்பட்டு பல வித வியாதிகளை உருவாக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறி – முட்டைகோசு. இது ஜீரணமாக நான்கு மணிநேரம் ஆகும். ஆதலால், தவிர்ப்பது நல்லது.
அதிக கொழுப்பு உணவுகள் நீண்ட நேர சோம்பேறித்தனத்தை வளர்க்கும். ஆதலால் அப்படிப்பட்ட உணவுகளை உண்டால் சிறிது தூரம் நடக்கவேண்டும்.
பசியை கடந்து இருக்க பழகவேண்டும்!
உண்ணும் உணவில் நீர் தன்மை அதிகம் இருக்கவேண்டும்
வாரத்தில் ஒருமுறையேனும் உப்பில்லாமல் விரதம் இருக்க பழகுங்கள்! அனைத்தும் கைவசமாகும்!