ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு
பாராளுமன்றத்தின் நடப்பு ஆண்டுகான பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கான தேதியை உறுதி செய்ய பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், பிப்ரவரி 25ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், பிப்ரவரி 26ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், பிப்ரவரி 29ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்துக்கு பின்னர் இத்தகவலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது. முதல் பகுதி பிப்ரவரி 23 தொடங்கி மார்ச் 16-ல் நிறைவடைகிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25-ல் தொடங்கி மே 13-ல் முடிவு பெறுகிறது.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பாராளுமன்றத்தின் மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத் தொடர்கள் முழுமையாக ஸ்தம்பித்த நிலையில் சரக்கு, சேவை வரி மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப் படாமல் கிடப்பில் உள்ளன.
இந்த சூழலில் கிடப்பில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றவும், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருவதால் அரசியல் தலைவர்கள் தேர்தல் பணிகளில் மூழ்கி விடக்கூடும் என்பதாலும் முன்கூட்டியே பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.