அமெரிக்க அதிபர் வேட்பாளர் பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைவதை அடுத்து அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருப்பவர் டொனால்டு டிரம்ப் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் நேற்று நியூயார்க் நகரில் இருந்து ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் நகருக்கு போயிங்-757 ரக விமானத்தில் நேற்று பயணம் செய்தார்.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக அந்த விமானத்தின் விமானி அவசரமாக டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லே விமான நிலையத்தை தொடர்பு கொண்டு, அனுமதி பெற்று, அங்கு அந்த விமானத்தை அவசரமாக தரை இறக்கினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து வேறு ஒரு சிறு விமானம் மூலம் டிரம்ப், லிட்டில் ராக் நகருக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் பயணம் செய்த விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.