காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா விஜயதாரிணி. ராகுலை சந்தித்த பின் அளித்த பேட்டி
சமீபத்தில் மகிளா காங்கிரஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ விஜயதாரிணி, முதல்வர் ஜெயலலிதாவை ஒருசில பேட்டிகளில் புகழ்ந்து வந்த நிலையில் அவர் விரைவில் அதிமுகவில் தன்னை இணைத்து கொள்வார் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் சமீபத்தில் , டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம், “‘நான் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து செயல்படுவேன். மத்திய தலைமையின் ஆதரவு எனக்கு உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியை விட்டு நான் விலகமாட்டேன். வேறு கட்சியில் சேருவதற்காக நான் யாரையும் சந்தித்து பேசவில்லை” என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு விஜயதாரிணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அதன் காரணமாக விஜயதாரிணியின் ஆதரவாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த மோதலை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்க வேண்டும் என சோனியா, ராகுல் காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் புகார் கொடுத்த விஜயதாரிணியை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த பொன்னம்மாளின் பேத்தி எம்.ஜான்சி ராணியை நியமித்தது. இதன் காரணமாக அவர் காங்கிரஸை விட்டு விலகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.