National Council for Hotel Management & Catering Technology (NCHMCT) மற்றும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) இணைந்து வழங்கும் B.Sc (Hospitality & Hotel Administration) படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் NCHMCT-JEE-2016 நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக விளக்குகிறார் கல்வியாளரும், ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமியின் இயக்குநருமான ஆர்.ராஜராஜன்.
NCHMCT நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுய அதிகாரமுள்ள அமைப்பாகும். இந்த அமைப்பு பல்வேறு கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து Hospitality & Hotel Administration சார்ந்த படிப்புகளை வழங்குகிறது. இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து இந்நிறுவனம் வழங்கும் B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட பட்டப்படிப்பு, உலகெங்கும் அங்கீகரிக்கப்படும் வேலை வாய்ப்பு மிகுந்த படிப்பாகும்.
விருந்தோம்பல் பிரிவிற்கான திறமை, மேலாண்மைத் திறன், உணவு உற்பத்தி, உணவுச் சேவை, ஹவுஸ் கீப்பிங், ப்ரன்ட் ஆபீஸ் செயல்பாடு, உணவுத் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய படிப்பு இது. சென்னை, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், புதுடில்லி, குஜராத், கோவா உள்பட நாடெங்கும் உள்ள மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்கள், சுயநிதி நிறுவனங்களில் இப்படிப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது. இப்படிப்பில் மொத்தம் 7667 இடங்கள் உள்ளன. NCHMCT-JEE நுழைவுத்தேர்வு அடிப்படையில் இப்படிப்புக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
யாரெல்லாம் இந்த தேர்வை எழுதமுடியும்?
+2 தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். இந்தக் கல்வியாண்டில் +2 பொதுத்தேர்வு எழுத விருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த அனைத்து மாணவர்களும் இத்தேர்வை எழுத தகுதி வாய்ந்தவர்களே. பொதுப்பிரிவு, OBC மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அடிப்படை வயது வரம்பு 22. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 15%, பழங்குடியின மாணவர்களுக்கு 7.5%, கிரீமிலேயர் அல்லாத மாணவர்களுக்கு 27%, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நுழைவுத்தேர்வு எந்த அடிப்படையில் நடக்கும்?
ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் நடைபெறும் 3 மணி நேரத்திற்கான இந்த நுழைவுத்தேர்வில் மாணவர்களின் திறமை மற்றும் நுண்ணறிவு சோதிக்கப்படும். விருந்தோம்பல், சேவைகள், லாஜிகல் ரீசனிங், சிந்தனைத் திறன், பொது அறிவு, ஆங்கில இலக்கணம் போன்றவற்றை உள்ளடக்கி வினாக்கள் அமையும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.
இப்படிப்பின் எதிர்காலம்?
சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியை எட்டிவரும் காலம் இது. வேலை வாய்ப்புகளும் பெருகி வருகிறது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நட்சத்திர உணவகங்கள், ரெஸ்டாரென்ட், துரித உணவகங்கள், விமான சமையல் துறை, மார்க்கெட்டிங், சேல்ஸ் துறை சார்ந்த பணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சுற்றுலாத்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிகளும் கிடைக்க வாய்ப்புண்டு. வணிக மற்றும் வர்த்தகக் கப்பல்கள், இந்திய விமானப்படை, ரயில்வே போன்ற துறைகளில் உணவு மற்றும் விருந்தோம்பல், வாடிக்கையளர் தொடர்பு, சுற்றுலாத்துறை பிரிவுகளில் மிகுந்த வேலை வாய்ப்பு உண்டு. இப்படிப்பை முடித்தபின் M.Sc, MBA போன்ற படிப்புகளை இந்தியா மற்றும் அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பயிலும் வாய்ப்பும் உண்டு.
“இப்படிப்பை முடித்தவர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நட்சத்திர உணவகங்கள், ரெஸ்டாரென்ட், துரித உணவகங்கள், விமான சமையல் துறை, மார்க்கெட்டிங், சேல்ஸ் துறை சார்ந்த பணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது”