தைவான் நாட்டில் பயங்கர பூகம்பம். 17 மாடி கட்டிடம் தரைமட்டம்
தைவான் நாட்டில் உள்ள தைனன் என்ற நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாகவும் 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகல் கூறுகின்றன.
தைவான் நாட்டில் நேரப்படி இன்று அதிகாலை நான்கு மணிக்கு மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நிலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க்கம் ரிக்டர் அளவில் 6.4 என்ற நிலையில் இருந்ததால் தைனன் நகரின் பெரிய பெரிய கட்டிடங்கள் சீட்டுக்கட்டுக்கள் போல் சரிந்து காட்சியளிக்கின்றன. இந்த பகுதியில் 17 மாடிகளை கொண்ட ‘வேய் குவான்’ என்ற குடியிருப்பு கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்து ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளில் சிக்கி இருந்த சுமார் 300 பேர்களை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தைவான் அதிபர் மாய்ங்ஜியோ உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளார். பெரிய கட்டிடங்களுக்குள் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
Chennai Today News: Strong Quake Hits Taiwan, Killing 5 and Injuring 318