நேபாளம் நாட்டின் முன்னாள் பிரதமர் மரணம். பிரதமர் மோடி இரங்கல்
நேபாளம் நாட்டின் முன்னாள் பிரதமரும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சுஷில் கொய்ராலா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78.
புற்றுநோய் பாதிப்பால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சுஷில் கொய்ராலா சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் தனது இல்லத்தில் காலமானதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமரின் உடல் நேபாளம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வைக்கபப்ட்டுள்ளது.
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டதில் முக்கிய பங்காற்றிய கொய்ராலா தனது ஆட்சியின்போது கடந்த நவம்பர் 20 ஆம் தேதி, புதிய அரசியல் சாசனத்தை அமல்படுத்தினார். இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் அவரை கே.பி.ஒலி என்பவர் தோற்கடித்தார்.
இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, 1954 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விமானத்தை கடத்தியது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் இந்திய சிறையில் அடைக்கப்பட்டார் கொய்ராலா. நேபாள காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு இரண்டு வாரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் கொய்ராலா இன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த நேபாள தலைவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மதிப்புமிக்க நண்பரை இந்தியா இழந்துவிட்டது என மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.