உள்ளிருக்கும் வீரன் என்றுமே மறைய மாட்டான். ஹனுமந்தப்பாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 10 இந்திய ராணுவ வீரர்களில் ஆறு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா நேற்று பரிதாபமாக மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு இந்திய நாடே கண்ணீர் சிந்திய நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹனுமந்தப்பா உள்ளிருக்கும் வீரர் என்றும் அவரை போன்றவர்கள் என்றுமே மறைய மாட்டார்கள் என்றும் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார். “ஹனுமந்தப்பா உயிரிழப்பு நமக்கு வருத்தம் மற்றும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். ஹனுமந்தப்பாவின் உள்ளிருக்கும் வீரன் என்றுமே மறைய மாட்டான், ஹனுமந்தப்பா போன்ற வீரர்களை கண்டு நாடே பெருமை கொள்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஹனுமந்தப்பாவின் மறைவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சியாச்சின் பனிப்பாறை சரிவில் சிக்கி, 6 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவுக்கு, ராணுவ மருத்துவமனையின் அவசர சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். அவருடைய உயிரை காப்பாற்ற, கடந்த மூன்று நாட்களாக போராடி வந்த நிலையில் அவர்களுடைய கடும் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அவர் நேற்று முற்பகல் 11:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டது. அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.