ஆண் நீதிபதி மீது பெண் நீதிபதி பாலியல் புகார். விசாரணை நடத்த துணை ஜனாதிபதி உத்தரவு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஐகோர்ட் நீதிபதி ஒருவர் மீது பெண் நீதிபதி பாலியல் புகார் கூறிய பரபரப்பான புகார் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமித் அன்சாரி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். நீதித்துறையிலே பாலியல் கொடுமையா? என்ற பரபரப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச ஐகோர்ட் நீதிபதி எஸ்.கே.கங்கலே என்பவர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் நீதிபதி ஒருவர் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி கங்கலேவுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டன தீர்மானம் கொண்டுவருமாறு எம்.பிக்கள் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 58 எம்.பி.க்கள் கண்டனம் தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரியிடம் நோட்டீஸ் வழங்கினர். அந்த நோட்டீஸில், “குவாலியர் மாவட்ட நீதிமன்ற பெண் நீதிபதிக்கு கங்கலே பாலியல் தொல்லை கொடுத்தது, ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவருக்கு பாதிப்பு ஏற்படுத்தியது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்தப் பெண் நீதிபதியை சித்திக்குக்கு பணியிடமாற்றம் செய்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
எம்.பி.க்களின் நோட்டீஸை ஏற்றுக் கொண்ட அன்சாரி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்ஜித் சிங் தலைமையில் விசாரணைக் குழுவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமித்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி பணியில் இருந்து நீதிபதி விக்ரம்ஜித் ஓய்வு பெற்றார். எனினும், நீதிபதிகள் விசாரணை சட்டம் 1968-ன்படி அவர் ஓய்வு பெற்றாலும், விசாரணை குழுவின் தலைவராக நீடிக்கலாம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கருத்து தெரிவித்திருந்தார். எனினும், மாநிலங்களவைத் தலைவரின் முடிவுக்கு விட்டுவிட்டார்.
இந்நிலையில், ம.பி. நீதிபதி கங்கலே மீதான புகாரை விசாரிக்கும் விசாரணை குழுவை, மாநிலங்களவை தலைவர் அன்சாரி மாற்றி அமைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து மாநிலங்களவை வெளியிட்ட அறிக்கையில், “விசாரணைக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர நீதிபதி மஞ்சுளா செல்லூர் (கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), கே.கே.வேணுகோபால் (உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்) ஆகியோர் ஏற்கெனவே விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Today News: Rajya Sabha Chairman appoints SC judge to probe sexual harassment charge