இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு எச்சரிக்கை மணி. கவாஸ்கர்
இலங்கை அணியுடன் இந்திய அணி மோதிய முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து கருத்து கூறியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் மேலும் கூறியதாவது:
இலங்கை அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் சரியான இடத்தில், சரியான அளவில் பந்துகளை வீசினர். இந்த பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, பரிட்சயம் இல்லாதவர்கள். எனவே சற்று பொறுமையாக பந்துகளை கணித்து ஆடியிருக்க வேண்டும். இதனை இந்திய பேட்ஸ்மேன்கள் செய்யவில்லை.
முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை இழந்தபோதிலும் அடுத்தடுத்து வந்த பேட்ஸ் மேன்களும் ஷாட் அடிப்பதிலேயே குறியாக இருந்தனர். பந்து ஸ்விங் ஆகிவந்த நிலையில் அதை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடுவதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் விளையாடியதை போலவே இங்கும் ஆட வேண்டும் என்று நினைத்தது தவறு. இந்திய அணி, இலங்கை வீரர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து, மதித்து ஆடியிருக்க வேண்டும். அப்படி செயல்பட்டிருந்தால் விக்கெட்டுகள் விழுந்திருக்காது. கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். இனிமேல் இலங்கை பந்து வீச்சாளர்களை ஜாக்கிரதையாக கையாள வேண் டும் என்ற எச்சரிக்கையை இந்திய வீரர்கள் உணர்ந்திருப்பார்கள்.
பந்து வீச்சில் தோனியின் கணக்கு தவறாகவே அமைந்தது. 101 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 20 ஓவர்கள் வரை ஆட்டம் செல்லாது என்பதை தோனி உணர்ந்திருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கு ஒரே வழி இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது மட்டுமே. ஆனால் முதன்மை பந்து வீச்சாளர்களான பும்ரா, நெஹ்ரா, அஸ்வின் ஆகியோருக்கு முழு ஓவர்கள் வழங்கப்படவில்லை.
இந்த போட்டி இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியடித்துள்ளது. எஞ்சிய இரு போட்டிகளுக்கும் இலங்கை அணி சிறப்பான வகையில் தயார் ஆகும். எனவே இந்திய அணி விழித்துக்கொள்ள வேண்டும். இலங்கை அணி வீரர்கள் நமக்கு எதிராக எந்த வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.