அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிவந்த அண்டோனின் ஸ்காலியா(79) மேற்கு டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சொகுசு ஓய்வு விடுதியில் மரணம் அடைந்தார்.
பழமைவாதத்தையும், அமெரிக்காவின் தொன்மையான கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை எழுதியுள்ள ஸ்காலியாவின் மரணம் இயற்கையாக அமைந்ததாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ள நிலையில், விடுமுறையை கழிப்பதற்காக கலிபோர்னியாவுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அண்டோனின் ஸ்காலியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அமெரிக்காவின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அண்டோனின் ஸ்காலியாவுக்கு பதிலாக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா ஆலோசித்துவரும் நிலையில் அமெரிக்க இந்தியரான ஸ்ரீ ஸ்ரீனிவாசன் உள்பட ஐந்து நீதிபதிகளின் பெயர்கள் இப்பதவிக்காக பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஆனால், புதிய நீதிபதியை நியமிப்பதில் ஒபாமா அவசரம் காட்டக்கூடாது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று புதிய அதிபராக பதவி ஏற்பவர்தான் இந்த நியமனத்தை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.