இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர். காவல்துறை ஆணையர் பாராட்டு
இந்தியாவில் உள்ள திருநங்கையர்கள் வாழ்வாதாரத்திற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தனது அயராத முயற்சியினால் நாட்டின் முதல் சப் இன்ஸ்பெக்டராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ப்ரித்திகா யாஷினி என்ற திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காவல்துறையினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் சுமித் சரண் நேற்று தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இவர்களில் ஒருவர் சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி. இவருக்கு எஸ்.ஐ. பணி நியமன ஆணையை வழங்கிஅ பாராட்டு தெரிவித்த ஆணையர், இவர் போன்று இன்னும் ஏராளமான திருநங்கைகள் காவல்துறைக்கு பணிபுரிய வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார்.
எஸ்.ஐ பணி நியமன ஆணையை பெற்ற பின்னர் ப்ரித்திகா யாஷினி செய்தியாளர்களிடம் கூறியபோது, ”நாட்டின் முதல் திருநங்கையாக உதவி காவல் ஆய்வாளர் பணிக்குத் தேர்வாகி உள்ளேன். பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றுவேன். முன்மாதிரி காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றுவேன். பதவி உயர்வு பெற்று ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்பது எனது லட்சியமாகும்
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும், அதற்காக நான் பாடுபடுவேன். மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண் சிசுக் கொலைக்கு முன்னுரிமை கொடுத்து, இதுபோன்ற கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.
Chennai Today News: India’s first transgender sub inspector at Salem